ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

மாமன்னருக்கு எதிராக காணொளி வழி அதிருப்தியை வெளிப்படுத்திய நபர் கைது 

ஷா ஆலம், நவ 23- நாட்டின் பத்தாவது பிரதமரை தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா அவர்களுக்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக இண்ட்ஸ்டாகிராம் பதிவில் காணொளியை வெளியிட்ட ஆடவர் ஒருவரை சிலாங்கூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த சந்தேகப் பேர்வழி பதிவேற்றம் செய்த 15 விநாடி காணொளி குறித்து உள்ளூர் ஆடவர் ஒருவர் கடந்த திங்கள்கிழமை இரவு மணி 10.52 அளவில் அம்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.

பிரதமரை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் மாட்சிமை தங்கிய மாமன்னர் மீது அந்த இண்ஸ்டாகிராம் கணக்கின் உரிமையாளர் அதிருப்தி கொண்டுள்ளது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் புகார் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் நேற்றிரவு 10.30 மணியளவில் காஜாங்கிலுள்ள  ஒரு வீட்டில் அவ்வாடரை கைது செய்ததாக அவர்  சொன்னார்.

அந்த 35 வயது ஆடவரை விசாரணைக்காக வரும் 25ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான அனுமதியை கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாங்கள் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :