ECONOMYMEDIA STATEMENTPBT

சட்டவிரோத குப்பைக் கொட்டும் நிலங்கள் பறிமுதல் செய்யப்படும்- மந்திரி புசார் எச்சரிக்கை

ஸ்ரீ கெம்பாங்கான், டிச 6- நில உரிமையாளர்கள் அமலாக்கத் தரப்பினருடன் ஒத்துழைக்கத் தவறினால் தாமான் புஞ்சா ஜாலில் பகுதியிலுள்ள 9 ஹெக்டர் பரப்பளவு கொண்ட 15 லாட் நிலங்களை பறிமுதல் செய்யப்படும் என சிலாங்கூர் மாநில அரசு எச்சரித்துள்ளது.

அந்த நிலங்களில் மீட்புப் பணிகளை கொள்ளப்படுவதற்கு அதன் உரிமையாளர்கள் தொடர்ந்து தடையாக இருந்து வந்தால் 1965ஆம் ஆண்டு தேசிய நிலச் சட்டத்தின் 130வது பிரிவின் கீழ் 8ஏ எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இது அரசாங்க நிலம் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல. மாறாக, தனியாருக்குச் சொந்தமானது. நிலத்தை பறிமுதல் செய்வதாக இருந்தால் 7ஏ பாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். நில நிபந்தனை மீறலை சரிசெய்வதற்காக 7ஏ பாரம் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது என்று அவர் சொன்னார்.

விசாரணை நடத்துவதற்கும் நிலம் மறுபடியும் சீரமைப்பு செய்யப்பட்டதை உறுதி செய்வதற்காகவும் 7ஏ நோட்டீஸ் வெளியிடப்படுகிறது. அதன் பின்னர் நிலத்தை பறிமுதல் செய்வதற்கு நமக்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை தேவைப்படும் என்றார் அவர்.

நேற்று சம்பந்தப்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் மையத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

அந்த பகுதியில் குப்பை கொட்டும் நடவடிக்கை ஓராண்டிற்கு முன்னரே நிறுத்தப்பட்டு விட்ட போதிலும் அந்த குப்பைக் குவியலிலிருந்து வெளிப்படும் கழிவு நீர் கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது என அவர் குறிப்பிட்டார்.

அப்பகுதியில் கடந்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளாக குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் ஓராண்டு காலமாக அப்பணி நிறுத்தப்பட்டுள்ளது. இச்சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் சுபாங் ஜெயா மாநகர் மன்றம் பல முறை குற்றப்பதிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த சம்மன்களுக்கான 25,000 வெள்ளி அபராதம் முழுமையாகச் செலுத்தப்பட்டு விட்டது. அப்பகுதியில் அமைக்கப்பட்ட காங்கீரிட் சுவரும் உடைக்கப்பட்டு விட்டது என்று அமிருடின் மேலும் தெரிவித்தார்.

 


Pengarang :