ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

வெ.1.46 கோடி செலவில் ஷா ஆலம் வெள்ள தடுப்புச் செயல் திட்டம்- மாநில அரசு ஒப்புதல்

ஷா ஆலம், டிச 6- ஷா ஆலம் மாநகர் மன்றப் பகுதியில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் அமலாக்கப்படவுள்ள ஷா ஆலம் வெள்ள நடவடிக்கை செயல் திட்டத்திற்கு (சுசுட்) மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

செக்சன் 13 மற்றும் செக்சன் யு1 ஆகிய பகுதிகளில் பம்ப் ஹவுஸ் நிலையங்களை  தரம் உயர்த்துவது பெர்சியாரான் அமானில் பம்ப் ஹவுஸ் நிலையத்தை நிர்மாணிப்பது மற்றும் செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடாவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது ஆகியவை இந்த வெள்ளத் தடுப்புத் திட்டங்களில் அடங்கும் என்று ஷா ஆலம் டத்தோ பண்டார் டாக்டர் நோர் ஃபுவாட் அப்துல் ஹமிட் கூறினார்.

இது தவிர ஜாலான் சக்சமா 25/29 மற்றும் ஜாலான் ஹிட்மாட் 25/35 ஆகிய பகுதிகளில் பம்ப் ஹவுஸ் நிலையங்களை அமைப்பது, செக்சன் 32, கம்போங் புக்கிட் நாகாவில் கழிவு நீர் அகற்றும் முறையை சீரமைப்பது ஆகிய பணிகளையும் இந்த திட்டம் உள்ளடக்கியள்ளது என அவர் சொன்னார்.

மொத்தம் 1 கோடியே 46 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான இத்திட்டத்திற்கான டெண்டர் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு விட்டன. வெள்ள ஆபத்து நிறைந்த பகுதியில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பாக வாழ முடியும் என்ற நம்பிக்கையை இந்த திட்ட அமலாக்கம் ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 10வது டத்தோ பண்டாராக நேற்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்தாண்டு டிசம்பர் 18ஆம் தேதி ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் ஷா ஆலம்  குறிப்பாக தாமான் ஸ்ரீ மூடா கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் வெள்ளத் தடுப்பு பணிகள் குறுகிய கால அடிப்படையிலும் பல்வேறு கட்டங்களாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Pengarang :