ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

கிளந்தான், திரங்கானுவில் வெள்ளம் தணிந்தது- மூன்று மாநிலங்களில் பாதிப்பு அதிகரிப்பு

கோலாலம்பூர், டிச 24- கிளந்தான் மற்றும் திரங்கானுவில் வெள்ள பாதிப்பு தணிந்து வரும் வேளையில் சபா, சரவா மற்றும் பேராக்கில் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனினும், ஜோகூர் மாநிலத்தில் வெள்ள நிலைமை சீராக இருந்து வரும் வேளையில் அங்கு 32 பேர் மட்டுமே நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் வெள்ள பாதிப்பு காரணமாக துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 33,856ஆகப் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சரவா மாநிலத்தில் இன்று காலை 294 குடும்பங்களைச் சேர்ந்த 1,236 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில வெள்ளப் பேரிடர் மேலாண்மை செயல்குழு கூறியது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 93 குடுமபங்களை உள்ளடக்கிய 363 பேராக இருந்ததாக அது தெரிவித்தது.

சபாவில் நேற்றிரவு 21 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேர் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்த நிலையில் இன்று காலை அந்த எண்ணிக்கை 23 குடும்பங்களைச் சேர்ந்த 78 பேராக அதிகரித்தது.

பேராக் மாநிலத்தைப் பொறுத்த வரை இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 17 குடும்பங்களைச் சேர்ந்த 69 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஹிலிர் பேராக்  மற்றும் பாகான் டத்தோவிலுள்ள இரு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திரங்கானுவில் இன்று காலை நிலவரப்படி 112 நிவாரண மையங்களில் 15,243 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 20,552 ஆக பதிவாகியிருந்தது.

கிளாந்தான் மாநிலத்தில் உள்ள 48 துயர் துடைப்பு மையங்களில்  17,298 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 17,398 பேராக இருந்தது.


Pengarang :