SELANGOR

கிள்ளானில் கார் நிறுத்தக் குற்றத்திற்கு வெ.1,000 அபராதம்- முறையீடு செய்தால் குறைக்கப்படும்- இங் ஸீ ஹான் தகவல்

கிள்ளான், ஜன 9- கிள்ளானில் நேற்று கார் நிறுத்தக் குற்றத்திற்காக 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டவர்கள் அபராதத் தொகையைக் குறைப்பதற்கு ஏதுவாக கிள்ளான் நகராண்மை கழகத்திடம் மேல்முறையீடு செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பில் கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவர் நோராய்னி ரோஸ்லானைத் தாம் தொடர்பு கொண்டதாகவும் அபராதம் தொடர்பான மேல் முறையீடுகளை பரிசீலிக்க தாம் தயாராக உள்ளதாக அவர் கூறியதாகவும் ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் ஃப்ரீ மலேசியா டுடே இணைய ஊடகத்திடம் தெரிவித்தார்.

பெரும்பாலான வாகனமோட்டிகள் வேண்டுமென்றே அத் தவறை செய்யவில்லை என்பதை நான் அறிவேன். ஆகவே, இதன் தொடர்பாக நகராண்மைக் கழக தலைவரிடம் நான் விவாதித்தேன். அபராதத் தொகையை குறைப்பதற்கு ஏதுவாக அவரிடம் நேரடியாக மேல்முறையீடு செய்யும்படி பாதிக்கப் பட்டத் தரப்பினரைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

பொது பூங்காக்களுக்கான விதிகளை அந்த வானமோட்டிகள் மீறியுள்ளனர். அவர்களின் அந் நடவடிக்கையால் செடிகள் மற்றும் தாவரங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இக் குற்றத்திற்கு கூடுதல் பட்சம் 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும். நீதிமன்றம் சென்றால் 2,000 வெள்ளி அபராதம் செலுத்த வேண்டி வரும் என்றார் அவர்.

வாகனங்களைத் திடலில் நிறுத்திய குற்றத்திற்காகக் கிள்ளான் நகராண்மைக் கழக அமலாக்கப் பிரிவினர் தங்களுக்கு 1,000 வெள்ளி அபராதம் விதித்தது  குறித்து சுமார் 30 வாகனமோட்டிகள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

தாமான் எங் ஆன் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற தோக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்ட தங்கள் பிள்ளைகளுக்கு உற்சாக மூட்டுவதற்காக வந்த பெற்றோர்கள் தங்கள் வாகனங்களை அருகே உள்ள திடலில் நிறுத்தியிருந்தனர்.


Pengarang :