SELANGOR

சிலாங்கூரில் 200 ஆலயங்கள், 20 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா- கணபதி ராவ் தகவல்

செமினி, ஜன 30-  சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக கடந்த 2013 ஆம் 
ஆண்டு பதவியேற்றது முதல் இது வரை 200 கோவில்களுக்கும் 20 தமிழ்ப் 
பள்ளிகளுக்கும் நிலப் பட்டா வழங்கப்பட்டிருப்பதாக  வீ. கணபதி ராவ் தெரிவித்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் மாநில இந்தியர்களுக்கு மாநில அரசு பல 
வகைகளில் பேருதவி புரிந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் பள்ளிகளுக்கு 50 லட்சம் வெள்ளி, கோவில்களுக்கு 18 லட்சம் வெள்ளி, வசதி குறைந்த தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு 10 லட்சம் வெள்ளி இலவசப் பேருந்து கட்டணம், உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கு 30 லட்சம் வெள்ளி 
கல்வி நிதி மற்றும் சிறு தொழில் இந்திய வணிகர்களுக்கு உதவ 10 லட்சம் வெள்ளி 
வழங்கப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்.

உலு லங்காட் கெஅடிலான் தொகுதி தலைவர் இராஜன் முனுசாமி, காஜாங் கவுன்சிலர் தியாகராஜன், இராமச்சந்திரன், சந்திரன் இராமசாமி, கிராமத் தலைவர் நடேசன், ராஜ்குமார் ஆகியோர் ஏற்பாட்டில் செமினி பண்டார் ரிஞ்சிங்கில்  சிலாங்கூர் மாநிலத் தைப்பொங்கல் விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

உலுலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சானி ஹண்சான், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த 
தைப்பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய விழாவாக விளங்கும் தைப் பொங்கல் ஒவ்வொரு ஆண்டும் 
உலுலங்காட் பக்கத்தான் ஹரப்பான் சார்பில்  விமரிசையாகக் கொண்டாடப்பட்டு 
வருவது பாராட்டுக்குரியது.

Pengarang :