புதிய தோற்றத்தில் அம்பாங் ஜெயா மாநகர் மன்றத்தின் நடமாடும் முகப்பிடச் சேவை

அம்பாங் ஜெயா, பிப் 1- புதிய தோற்றத்திலான நடமாடும் முகப்பிடச் சேவையை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் நேற்று அறிமுகப்படுத்தியது.

இந்த நடமாடும் முகப்பிடச் சேவைக்கு பயன்படுத்தப்படும் வாகனம்  நவீன கணினி முறை மற்றும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் அமர்வதற்கான இருக்கைகளோடு விசாலமான இட வசதியையும் கொண்டுள்ளது என்று நகராண்மைக் கழகத் தலைவர் கூறினார்.

அம்பாங் ஜெயா சொத்து உரிமையாளர்கள் மதிப்பீட்டு வரி மற்றும் அபராதம் உள்ளிட்ட இதர கட்டணங்களைச் செலுத்துவதை எளிதாக்கும் நோக்கில் இந்த நடமாடும் முகப்பிடச் சேவையை தாங்கள் தொடக்கியுள்ளதாக முகமது பவுசி முகமது யாத்திம் குறிப்பிட்டார்.

இந்த வாகனத்தில் இரு முகப்பிடங்கள் உள்ளன. அதில் ரொக்கம், பற்று அட்டை மற்றும் காசோலை மூலம் கட்டணங்களைச் செலுத்தலாம் என்று நேற்று இங்குள்ள மெனாரா எம்.பி.ஏ.ஜே.வில் இந்த சேவையைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம்  அவர் சொன்னார்.

மக்கள் அதிகம் கூடும் அம்பாங் பாய்ண்ட், பள்ளிவாசல்கள், பாசார் பாகி, பாசார் மாலாம் போன்ற இடங்களில் இந்த வாகனம் நிறுத்தப்பட்டு முகப்பிடச் சேவை வழங்கப்படும் என்றார் அவர்.

இந்த முகப்பிடச் சேவை வழங்கப்படும் இடங்கள் தொடர்பான விபரங்களை  www.mpaj.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் சொன்னார்.

இந்த முகப்பிடச் சேவையின் வாயிலாக இந்த ஆண்டில் 20 லட்சம் வெள்ளி வரியை வசூலிக்க தாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


Pengarang :