கோலாலம்பூர், பிப் 2: சபா மற்றும் ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 1,666 பேரில் இருந்து இன்று காலை 1,735 பேராகச் சற்று அதிகரித்துள்ளது.
சபாவில் நேற்றிரவு 204 குடும்பங்களைச் சேர்ந்த 690 பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தற்போது 15 தற்காலிக தங்கும் மையங்களில் (PPS) 220 குடும்பங்களைச் சேர்ந்த 758 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.
“பைதான் மற்றும் பெலூரானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே வேளையில் பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது” என்று ஓர் அறிக்கையில் மூலம் மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு (ஜேபிபிஎன்) செயலகம் தெரிவித்துள்ளது.
ஜொகூரில் மூன்று மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 976 ஆக இருந்த நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி 977 பேராக அதிகரித்துள்ளது.
பத்து பஹாட், கோத்தா திங்கி மற்றும் செகாமட் ஆகிய இடங்களில் இயங்கி வரும் 10 தற்காலிகத் தங்கும் மையங்களில் இன்னும் 273 பேர் தங்கியுள்ளனர்.
இதற்கிடையில், பத்து பஹாட்டில் உள்ள சுங்கை பெகோக் இன்னும் 18.75 மீட்டர் அளவோடு அபாயகரமான அளவைப் பதிவு செய்து உள்ளது மற்றும் அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகிறது. – பெர்னாமா