ACTIVITIES AND ADSHEALTHMEDIA STATEMENT

டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

கோலாலம்பூர், பிப் 3: நான்காவது தொற்றுநோய் வாரத்தில் (ஜனவரி 22 முதல் 28 வரை) பதிவான டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 1,910 ஆகும். இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 409 சம்பவங்கள் குறைவாகும். மேலும், ஓர் இறப்பு பதிவாகியுள்ளது.

2022ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 2,948 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆனால், இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 8,968ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

“டிங்கி காய்ச்சலால் மொத்தம் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில் 2022ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் எந்த இறப்பும் ஏற்படவில்லை” என்று அவர் ஓர் அறிக்கையின் வழி தெரிவித்தார்.

நான்காவது தொற்றுநோய் வாரத்தில் 79 ஹாட்ஸ்பாட் இடங்கள் பதிவாகியுள்ளதாக டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்

சிக்குன்குனியா கண்காணிப்பில் நான்காவது வாரத்தில் ஐந்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவை பினாங்கில் மூன்று சம்பவங்கள், கெடா மற்றும் சிலாங்கூரில் தலா ஒரு சம்பவம் ஆகும். இன்றுவரை சிக்குன்குனியா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக உள்ளது என்றார்.

பண்டிகைக் காலத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் முறையாக நிர்வகிக்கப் படாவிட்டால் அவை ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறும் வாய்ப்புண்டு என நினைவுபடுத்தினார்.

“எனவே, விழா மற்றும் கொண்டாட்டம் நடைபெறும் இடத்தின் தூய்மையை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். சேதமடைந்த மற்றும் பயன்படுத்தப் படாதப் பொருட்களை மறுசுழற்சி அல்லது முறையாக அகற்றும் தளத்தில் அப்புறப்படுத்துங்கள்.

காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஏடிஸ் கொசுக்கள் அதிகமாக நம்மை தாக்கக் கூடும். ஆகவே அந்த நேரங்களில் வீட்டின் வெளியே நடவடிக்கைகளில் ஈடுபடும் போது பளிச்சென்ற ஆடைகளை அணிந்து கைகால்களை மூடிக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.

“உடல் பாகங்களில் கொசு விரட்டியை பயன்படுத்துங்கள். தைப்பூசம் மற்றும் சப் கோ மெய் கொண்டாட்டங்கள் போது ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கத்தை தடுக்க முற்படுங்கள்” என்று டாக்டர் நூர் ஹிஷாம் கேட்டுக் கொண்டார்.

– பெர்னாமா


Pengarang :