ECONOMYMEDIA STATEMENT

பட்டாசு, வாணவெடி விற்பனைக்கு அனுமதி- உள்துறை அமைச்சின் வழிகாட்டிக்கு போலீஸ் துறை காத்திருக்கிறது

கோலாலம்பூர், பிப் 4- பட்டாசு மற்றும் வாணவெடி விற்பனைக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் உள்துறை அமைச்சின் கொள்கை மற்றும் வழிகாட்டிக்காக அரச மலேசிய போலீஸ் படை காத்திருக்கிறது.

பொது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் நோக்கில் உள்துறை அமைச்சு இம்முடிவை எடுத்துள்ளதால் இந்த தொடர்பில் வெளியிடப்படும் வழிகாட்டி மற்றும் கொள்கையை காவல் துறை பின்பற்றும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.

இந்த விவகாரம் இப்போதுதான் என் கவனத்திற்கு வந்தது. இந்த அமலாக்கம் தொடர்பில் உள்துறை அமைச்சின் கொள்கை என்ன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

இங்குள்ள புக்கிட் கியாரா கூட்டரசு பூங்காவில் இன்று நடைபெற்ற கோலாலம்பூர் போலீஸ் நிலையிலான அரச மலேசிய போலீஸ் படையின் ஹைக்கிங் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைச் சொன்னார்.

பட்டாசு மற்றும் வாண வெடி விற்பனைக்கு அனுமதி வழங்குவது தொடர்பான முடிவு இரு தினங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் எடுக்கப்பட்டதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் கூறியிருந்தது தொடர்பில் அக்ரில் சானி இவ்வாறு கருத்துரைத்தார்.

நாட்டின் வருமானத்தைப் பெருக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறியிருந்த ஙா, மொத்த வியாபாரிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் நிலையில் இந்த விற்பனை கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.


Pengarang :