ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தனியாக மலையேறும் முயற்சியில் ஈடுபட்ட மாணவர் மாயம்- தீவிர தேடுதல்  நடவடிக்கையில் காவல்துறை

மெர்சிங், பிப் 4- இங்குள்ள பூலாவ் மாவாரில் கடந்த புதன்கிழமை தனியாக மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்ட தனியார் உயர்கல்விக் கூட மாணவர் ஒருவர் காணப்படவில்லை என புகார் செய்யப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை முதல் முகமது அக்மால் ஹக்கிமி இஷாக் (வயது 20) என்ற அந்த மாணவர் வீடு திரும்பாததால் அவரின் தந்தை நேற்று காலை குளுவாங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததாக மெர்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடென்டன்  அப்துல் ரசாக் அப்துல்லா கூறினார்.

அந்த மாணவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பூலாவ் மாவார் அருகே பூட்டப்படாத நிலையில் நேற்று காலை 11.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

காவல் துறை உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 22 மீட்புப் பணியாளர்கள் நேற்று மாலை 5.00 மணி தொடங்கி தேடி மீட்கும் நடவடிக்கையில் இறங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

காடுகள் மற்றும் கடலோரப் பகுதியை உள்ளடக்கிய இந்த தேடுதல் நடவடிக்கை கடுமையான மழை மற்றும் இருள் காரணமாக நேற்றிரவு 7.00 மணிக்கு நிறுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 இன்று காலை 8.00 மணிக்கு கடல் மற்றும் கரைப் பகுதியை மையமாக கொண்டு  தேடும் நடவடிக்கை தொடரப்பட்டது என்றார் அவர்.


Pengarang :