ALAM SEKITAR & CUACAECONOMY

மூன்று மாநிலங்களில் 47,000 பேர் வெள்ளத் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம்

கோலாலம்பூர், மார்ச் 9- இன்று காலை 8.00 மணி வரை மூன்று மாநிலங்களில் 47,000 பேர் இன்னும் வெள்ளத் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர். இப்பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின் அதிகமானோர் ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோகூர் மாநிலத்தில் பல மாவட்டங்களில் வெள்ளம் வடிந்த போதிலும் நேற்றிரவு 42,852ஆக இருந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை 45,048ஆக அதிகரித்தது.

பத்து பஹாட் மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவது 35,099 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ள வேளையில் அதற்கு அடுத்து மூவரில் 4,094 பேரும் தங்காக்கில் 2,436 பேரும் நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

மெர்சிங், கோத்தா திங்கி, குளுவாங், சிகாமாட் போன்ற மாவட்டங்களில்  வெள்ளம் வடிந்து வருவதாக மாநில பேரிடர் மேலாண்மைச் செயல்குழு கூறியது.

பகாங் மாநிலத்தின் ரொம்பினில் வெள்ள பாதிப்பு இன்னும் நீடித்து வரும் நிலையில் அங்குள்ள 15 துயர் துடைப்பு மையங்களில் 659 குடும்பங்களைச் சேர்ந்த 2,248 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழு தெரிவித்தது.

ரொம்பினில் உள்ள கெராத்தோங் ஆற்றில் நீர் மட்டம் தொடர்ந்து அபாயக் கட்டத்தில் உள்ளதாக மாநில வெள்ள நிலவரம் தொடர்பான அகப்பக்கத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

மலாக்கா மாநிலத்தின் ஜாசினில் உள்ள ஐந்து துயர் துடைப்பு  மையங்களில் இன்று காலை 141 குடும்பங்களைச்  சேர்ந்த 523 பேர் தங்கியுள்ளனர். நேற்றிரவு இந்த எண்ணிக்கை 149 குடும்பங்களைச் சேர்ந்த 557 பேராக இருந்தது.


Pengarang :