ECONOMYSELANGOR

அமெரிக்க முதலீட்டு மாநாட்டில் பங்கேற்கும் 11 நிறுவனங்களுக்கு மந்திரி புசார் தலைமையேற்கிறார்

ஷா ஆலம், ஏப் 24- அமெரிக்காவில் வரும் மே மாதம் நடைபெறும் முதலீட்டு உச்சநிலை மாநாடு மற்றும் அலோசனைகளை முன்வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மலேசியாவின் 11 தொடக்க தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையேற்கவுள்ளார்.

அமெரிக்க வர்த்தகத் துறையின் ஏற்பாட்டில் வரும் மே மாதம் 1 முதல் 4ஆம் தேதி வரை மேரிலெண்டில் நடைபெறும் 2023 செலக்ட் யு.எஸ்.ஏ. முதலீட்டு உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக அந்த 11 தொடக்க வர்த்தக நிறுவனங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் தொழில்நுட்ப மற்றும் இலக்கவியல் கழகம் (சிடெக்) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

அமெரிக்க வர்த்தக இலாகாவினால் ஏற்பாடு செய்யப்படும் பிரதான முதலீட்டு நிகழ்வாக இந்த உச்சநிலை மாநாடு விளங்குகிறது. அமெரிக்காவின் 51 மாநிலங்களைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளுக்கிடையே முதலீடு மற்றும் வர்த்தகத் துறையில் உறவுகளை வலுப்படுத்துவதற்குரிய தளமாக இந்த மாநாடு விளங்குகிறது.

இந்த செலக்ட்யு.எஸ்.ஏ. முதலீட்டு மாநாட்டை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடக்கி வைப்பார். அனைத்துலக நிலையிலான முதலீட்டாளர்கள் மற்றும் மூலதன நிறுவனங்களுடன் சந்திப்பு நடத்துவதற்கும் வர்த்தக வாய்ப்புகளை பகிர்ந்து கொள்வதற்கும் இந்த மாநாடு வாய்ப்பினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக  அமெரிக்க வர்த்தக இலாகா மற்றும் கலிபோர்னியா கவர்னர் அலுவலகம் ஏற்பாடு செய்யும் வட்ட மேசை மாநாட்டில் முதலீட்டுத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் பங்கேற்பார்.


Pengarang :