EKSKLUSIFMEDIA STATEMENT

சமையல் பொருள்களுக்கான செலவினத்தைக் குறைப்பதில் மலிவு விற்பனை பேருதவி- பொதுமக்கள் கருத்து

உலு லங்காட், மே 6- மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில் மாநில அரசு அமல்படுத்தி வரும் அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை பொது மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனைத் திட்டத்தை தொடர்ந்து நடத்தும் மாநில அரசின் முடிவு நோன்புப் பெருநாளை இன்னும் கொண்டாடி வரும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு பேருதவியாக அமைந்துள்ளதாக ஒய்வு பெற்ற பணியாளரான ரோஸ்லி லெமான் (வயது 63) கூறினார்.

சமையல் பொருள்களுக்கு செய்யும் செலவுகளை இந்த மலிவு விற்பனை  பெரிதும் குறைத்துள்ளது. நோன்புப் பெருநாளுக்காக பொது மக்கள் அதிகம் செலவு செய்துள்ள நிலையில் நிதிச் சுமையைக் சமாளிக்க இத்தகைய திட்டங்கள் பெரிதும் உதவியாக உள்ளன என்றார் அவர்.

நேற்று இங்குள்ள டுசுன் துவா தாமான் ஸ்ரீ நண்டிங்ல் நடைபெற்ற கோல லங்காட் மாவட்ட நிலையிலான மலிவு விற்பனையின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த மலிவு விற்பனையில் தரமான பொருள்கள் மிகவும் குறைவான விலையில் விற்கப்படுவதைக் கண்டு தாம் உண்மையில் ஆச்சரியமடைந்ததாக இத்திட்டத்தில் முதன் முறையாகப் பங்கேற்கும் சரிஹான் முகமது நோர் (வயது 65) கூறினார்.

என்னைப் போல் நிலையான வருமானம் இல்லாத மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டம் பெரிதும் துணையாக உள்ளேதோடு பணத்தை மிச்சப்படுத்துவதற்கும் உதவி புரிகிறது என்று அவர் சொன்னார்.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் காரணமாக மக்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ள தற்போதைய சூழலில் இது போன்ற மலிவு விற்பனைகளை தொடர்ந்து நடத்துவது அவசியம் எனக் கருதுகிறேன் என்றார் அவர்.


Pengarang :