ALAM SEKITAR & CUACAEKSKLUSIF

நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு- மாநில அரசின் கோவிட்-19க்கு பிந்தைய மிகப்பெரிய நிகழ்வு

காஜாங், மே 6- சிலாங்கூர் மாநில மக்கள் எதிர்நோக்கிய கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் கடும் வெள்ளத்திற்குப் பிறகு மாநில அரசினால் ஏற்பாடு செய்யப்படும் பெரிய அளவிலான நிகழ்வாக ஜெலாஜா கித்தா சிலாங்கூர் அய்டிபித்ரி எனும் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு திகழ்கிறது.

சிலாங்கூர் மாநிலம் பல்வேறு சவால்களிலிருந்து  மீண்டு, மேம்பாட்டை நோக்கி பயணிக்கும் தருணத்தில் மக்கள், மாநிலத் தலைவர்களை  சந்திப்பதற்குரிய வாய்ப்பினை இந்த பொது உபசரிப்பு  வழங்குகிறது என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.

சவால்மிக்க நிர்வாகக் கட்டத்தை சிலாங்கூர் தாண்டி வந்துள்ளது. பல்வேறு  சோக, திடீர் நெருக்கடிகளின் வழி மாநில  மக்கள் சோதனைகளுக்கு  ஆளானதை யாரும் மறுக்க முடியாது. எனினும், அரசு துறைகள், அரசு பணியாளர்கள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்பு காரணமாக இந்த இடர் பாடுகளிலிருந்து நம்மால் மீள முடிந்தது என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவலின் போது இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசியை வழங்கிய முதல் மாநிலமாக சிலாங்கூர் விளங்கியது. முன்களப் பணியாளர்களுக்கும் நாம்தான் முதலில் உதவி வழங்கினோம். அதே சமயம் மக்கள் கடன்களைத் திரும்பச் செலுத்துவதில் உதவியதோடு உணவுக் கூடைகளையும் பகிர்ந்தளித்தோம் என்றார் அவர்.

சிறிது காலத்திற்குப் பின்னர் நாம் வெள்ளப் பிரச்சனையை எதிர்கொண்டோம். இதனால் மக்கள் பெரிது பாதிப்புக்குள்ளானார்கள். உதவி வழங்குவதில் தொடக்கத்தில் சில பலவீனங்கள் காணப்பட்டாலும் பின்னர் வெற்றிகரமாக அப்பிரச்சனைகளைக் கையாண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,000 வெள்ளி வரை நிதியுதவி வழங்கினோம் என அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள தாமான் ஸ்ரீ நண்டிங் அகோரா இரவுச் சந்தை பகுதியில் நடைபெற்ற உலு லங்காட் மாவட்ட நிலையிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய  போது அவர் இதனைத தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் மற்றும் பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Pengarang :