ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

ஆறு வயதுச் சிறுவன் கார் ஓட்டிய விவகாரம்- பெற்றோர் உள்பட எழுவரிடம் வாக்குமூலம் பதிவு

அலோர் ஸ்டார், மே 13- ஆறு வயதுச் சிறுவன் ஒருவன் தன் பெற்றோரின் காரை யாருக்கும் தெரியாமல் ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பான போலீசாரின் விசாரணை முற்றுப் பெறும் தருவாயில் உள்ளது.

மருத்துவமனைத் தரப்பினரிடமிருந்து மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன் இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை மாநில சட்டத் துறை இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்படும் என்று லங்காவி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷரிமான் அஸ்ஹாரி கூறினார்.

லங்காவி, ஜாலான் கம்போங் பத்து தாங்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழந்த இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எழுவரிடம் தாங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அச்சிறுவனின் பெற்றோர் தவிர்த்து சம்பவ இடத்தில் இருந்த மூன்று சாட்சிகள், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ்காரர் மற்றும் அச்சிறுவனின் தாத்தா ஆகியோரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட அந்தச் சிறுவனிடமிருந்து முழு விபரங்களைப் பெறுவதற்கு கெடா மாநில போலீஸ் தலைமையகத்தின் சிறார் நேர்காணல் பிரிவுக்கு அவர் அழைக்கப்படுவார் என்றார் அவர்.

யூட்யூப் வலையொளி வாயிலாகவும் தன் தன் தந்தை காரோட்டும் விதத்தை கண்டும் தாம் காரை ஓட்டுவதற்கு கற்றுக் கொண்டதாக விசாரணையின் போது அச்சிறுவன் கூறினான் என ஷரிமான் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை விளையாட்டுப் பொருள் வாங்குவதற்காக தனது மூன்று வயது தம்பியை ஏற்றிக் கொண்டு அந்த ஆறு வயதுச் சிறுவன் காரை சொந்தமாக கடைக்கு ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. வீட்டிலிருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் அச்சிறுவனுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது.


Pengarang :