ECONOMYMEDIA STATEMENTSELANGOR

ஆட்சி கலைப்புக்கு சிலாங்கூர் தயாராகிறது- அலுவலகங்களை காலி செய்யும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள்

ஷா ஆலம், ஜூன் 4 – சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சிலர் மாநில அரசு தலைமைச் செயலகத்தில் உள்ள தங்கள்  அலுவலகங்களை காலி செய்யத் தொடங்கியுள்ளனர் என்ற தகவலை மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று  உறுதிப்படுத்தினார்.

தேர்தலுக்கு முன் குறிப்பாக, பதவி காலம் முடியும் போது ஆட்சிக்குழு உறுப்பினர்கள்  இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வது  வழக்கமான ஒன்றாகும் என அவர் சொன்னார். வழக்கமாக நானும் அதைத்தான் செய்வேன். மாநில சட்டமன்றத்தை கலைக்கும் போது நாங்களும் உடைமைகளை அப்புறப்படுத்துவோம். இதற்குப் பிறகு திட்டமிடப்பட்டதை நிறைவேற்றுவது மட்டுமே அவர்களின் கடமை. புதிய  கொள்கைகள் எதையும் அமல்படுத்த முடியாது என்றார் அவர்.

இதன் பின்னர் எல்லோரும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபடவுள்ளதோடு களத்தில் இறங்கி பிரசாரத்திலும் ஈடுபடுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

ஹாஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு பலியிடல் சடங்கிற்காக கால்நடைகளை வழங்கும் நிகழ்வுக்குப் பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

மாநில சட்டமன்றத்தை கலைப்பதற்கான தேதியைத் தீர்மானிக்க மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களைச் சந்திப்பதற்கு அனுமதிக்காக தாம் காத்திருப்பதாக கூறிய அமிருடின், சட்டமன்றத்தைக் கலைக்க
இன்னும் 23 தினங்கள் மட்டுமே  எஞ்சியுள்ளது என்றார்.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, திரங்கானு, கிளந்தான் மற்றும் கெடா ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு தேர்தல்  நடைபெறவுள்ளது.


Pengarang :