ACTIVITIES AND ADSECONOMYPBT

கின்றாரா தொகுதியில் இதுவரை 50 முறை மலிவு விற்பனை- இவ்வாரம் மூன்று இடங்களில் விற்பனைக்கு ஏற்பாடு

சுபாங் ஜெயா, ஜூன் 8- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) கடந்தாண்டு முதல் நடத்தி வரும்  ஜூவாலான் ஏசான் ராக்யாட் எனும் அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனையை கின்றாரா சட்டமன்றத் தொகுதி ஐம்பதுக்கும் மேற்பட்ட தடவை நடத்தியுள்ளது.

இவ்வாரத்தில் மேலும் மூன்று இடங்களில் இந்த விற்பனைக்கு தாங்கள் ஏற்பாடு செய்துள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

நேற்று கின்றாரா தொகுதி சேவை மையத்தில் வரும் சனிக்கிழமை பண்டார் கின்றாரா 2 சமூக மண்டபத்திலும் ஞாயிற்றுக்கிழமை பண்டார் கின்றாரா சூராவ் உகாஸ்யாவிலும் இந்த மலிவு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நகர்ப்புறங்களின் துரித வளர்ச்சிக்கு மத்தியில் வாழும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு உதவும் நோக்கில் இந்த அத்தியாவசிய உணவுப் பொருள் விற்பனையை மாநில அரசு நடத்தி வருவதாக அவர் சொன்னார்.

இந்த தொகுதியில் பல மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இத்தகைய பகுதிகளில் வசிக்கும் வசதி குறைந்தவர்களுக்கு மாநில அரசின் உதவித் திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதால் மலிவு விற்பனையை நடத்துவதில் இ குடியிருப்பு பகுதிகளுக்கு பிரத்தியேக வாய்ப்பை அளிக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் தொடங்கி ஒவ்வொரு வாரமும் மாநில அரசின் மலிவு விற்பனையை இத்தொகுதியில் தாங்கள் நடத்தி வருவதாக கூறிய ஊராட்சித் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினருமான அவர், ஒவ்வொரு இடத்திலும் 300 பேர் வரை பங்கேற்று பொருட்களை வாங்கிச் செல்வதாகச் சொன்னார்.

இங்குள்ள தொகுதி சேவை மையத்தில் நேற்று நடைபெற்ற மலிவு விற்பனையில் 350 பேர் வரை கலந்து கொண்டதாகவும் பொது மக்களின் அமோக வரவேற்பு காரணமாக காலை 10.00 மணிக்கு தொடங்கிய இந்த விற்பனை இரண்டே மணி நேரத்தில் முடிவுக்கு வந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :