ECONOMYMEDIA STATEMENT

காஜாங் தொகுதியில் மலிவு விற்பனை -இரண்டு மணி நேரத்தில் 500 கோழிகள் விற்றுத் தீர்ந்தன 

காஜாங், ஜூன் 18-  சிலாங்கூர் மாநில அரசின் மலிவு விற்பனைக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு இருந்து வருகிறது. இன்று இங்கு நடத்தப்பட்ட காஜாங் தொகுதி நிலையிலான மலிவு விற்பனையில் இரண்டு மணிக்கும் குறைவான நேரத்தில் 500 கோழிகள் விற்றுத் தீர்ந்தன.

ஒரு முழு கோழியை 10 வெள்ளிக்கு வாங்கும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதற்காக பொதுமக்கள் காலை ஏழரை மணி முதல் வரிசையில் காத்திருக்க தொடங்கியதாக இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் அதிகாரி நோர் அஜிலா அஜிஸ் கூறினார்.

காஜாங் தொகுதிக்கான இறுதி நிகழ்வாக விளங்கும் இந்த ஏசான் ரஹ்மா மலிவு விற்பனைக்கு மற்ற தொகுதிகளைப் போலவே இங்கும் நல்ல ஆதரவு கிடைத்தது. மக்கள் நலனை முன்னிறுத்தி மாநில அரசு மேற்கொண்டு வரும் பல நல்ல திட்டங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.

 இன்றைய இந்த நிகழ்வில் இரண்டு மணிக்கும் குறைவான நேரத்தில் 500 கோழிகள் விற்கப்பட்டன. வார  இறுதி நாளாக இருந்ததால் இந்த விற்பனை இன்று அமோகமாக நடைபெற்றது என்றார் அவர்.

இந்த விற்பனையில் அதிகமானோருக்கு பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் கோழி, முட்டை உள்ளிட்ட சில பொருட்களை ஒருவருக்கு இரண்டு என்ற நிலையில் கட்டுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10 வெள்ளிக்கும். பி கிரேட் முட்டை 10 வெள்ளிக்கும் ஒரு பாக்கெட் மாட்டிறைச்சி 10 வெள்ளிக்கும் கெம்போங் மீன் 6 வெள்ளிக்கும் ஐந்து கிலோ சமையல் எண்ணெய் 25 வெள்ளிக்கும் ஐந்து கிலோ அரிசி 10 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

 இந்த மலிவு விற்பனையின் வழி மாநில மக்கள் சுமார் ஒரு கோடியே 80 லட்சம் வெள்ளியை மிச்சப்படுத்துவதற்குரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக மந்திரி  புசார்  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மே மாதம் 31ஆம் தேதி கூறியிருந்தார்.

 .இந்த மலிவு விற்பனை தொடங்கப்பட்டது முதல் இதுவரை மூன்று கோடியே 70 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது,


Pengarang :