ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கள்ள நோட்டு விநியோகத்தில் ஈடுபட்ட இருவர் கைது 

ஜோர்ஜ் டவுன், ஜூலை 16-   ஜோகூர், ஜாலான் தெப்ராவ் மற்றும் ஜோர்ஜ் டவுன் ஆகிய இடங்களில் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட  சோதனையில் கள்ளநோட்டு விநியோகத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான நபர்களில் ஒருவர் 100 வெள்ளி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை விநியோகம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக  சந்தேகிக்கப் படுவதாக  தீமோர் லாவுட் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சோஃபியன் சாண்டோங் கூறினார்.

டச் அண்ட் கோ அட்டைக்கு  100 வெள்ளி கள்ள நோட்டை பயன்படுத்தி “டச் அண்ட் கோ” கார்டில் டாப் ஆப் எனப்படும் மதிப்புக் கூட்டு செய்தது தொடர்பாக கடந்த 8ஆம் தேதி ஜாலான் மெகாலிஸ்டரில் உள்ள ஒரு பல்பொருள் விற்பனை  கடையின் உதவி மேலாளரிடம் இருந்து தாங்கள் புகாரைப் பெற்றதாக  அவர் சொன்னார்.

இத்தகவலின் பேரில்  ஜோர்ஜ் டவுன் பகுதியில் இரவு 11.30 மணியளவில் சந்தேக  நபரைக் கைது செய்த போலீசார், புக்கிட் மெர்தாஜாமில் உள்ள அவரது வீட்டில் சோதனை  நடத்தி கைப்பேசி, உடைகள், ஏழு டச் என் கோ டாப்-அப் கூப்பன்கள் உள்ளிட்ட பல பொருட்களை பறிமுதல் செய்தனர் என்று அவர் சொன்னார்.

“இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தின் மூலம் அறிமுகமான  உள்ளூர் நபரிடமிருந்து 1,000 வெள்ளிக்கு 30 போலி 100  வெள்ளி நோட்டுகளை வாங்கியதாக  விசாரணையின் போது சந்தேக நபர் கூறியதாக  அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தகவல் மற்றும் உளவு நடவடிக்கையின் பலனாக  ஜாலான் தெப்ராவ் பகுதியில்  போலி  நோட்டுகள் விற்றதாக நம்பப்படும் இரண்டாவது நபரை போலீசார் கைது செய்ய முடிந்தது என்று அவர் கூறினார்.

தண்டனைச் சட்டத்தின் 489 பி பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக இருவரும் இப்போது ஏழு நாட்களுக்கு காவலில் வைக்கப் பட்டுள்ளனர் என்றும் சோஃபியன் கூறினார்.


Pengarang :