ECONOMYMEDIA STATEMENTSI

எஸ்.எம்.ஜி. திட்டம் தொடர்பில் அவதூறு- கெடா மந்திரி பெசாருக்கு எதிராக பெர்ஜெயா லேண்ட் சட்ட நடவடிக்கை

ஷா ஆலம், ஆக 5- சிலாங்கூர் மெரிடைம் கேட்வே (எஸ்.எம்.ஜி.) திட்டம் தொடர்பில் ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளை சுமத்தியது தொடர்பில் கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோருக்கு எதிராக பெர்ஜெயா லேண்ட் பெர்ஹாட் நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இவ்விவகாரத்தில் தங்களின் உரிமையைக் காப்பதற்காக உடனடியாக போலீஸ் புகார் செய்ததோடு சட்ட நடவடிக்கையிலும் இறங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி சைட் அலி சாஹூல் ஹமிட் கூறினார்.

டத்தோஸ்ரீ சனுசி சுமத்திய குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்பதோடு குற்றச்சாட்டிற்கு வலு சேர்க்கக்கூடிய எந்த ஆதாரத்தையும் கொண்டிருக்கவில்லை. சிலாங்கூர் மாநிலத்திற்கும் மாநில மக்களுக்கும் மேம்பாட்டைக் கொண்டு வருவதில் தங்கள் நிறுவனமும் மாநில அரசும் கொண்டுள்ள கடப்பாட்டை கீழறுக்கும் நோக்கிலும் பெர்ஜெயா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கிலும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.

அண்மையில் கெடா மாநிலத்தின் ஜித்ராவில் நடைபெற்ற அரசியல்  பிரசாரக் கூட்டத்தில் கிள்ளான் ஆற்றைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள எஸ்.எம்.ஜி. நிறுவனத்தின் பணிகள் குறித்து சனுசி வெளியிட்ட கருத்து தொடர்பில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சைட் அலி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

ஆற்றைத்  தூய்மைப்படுத்தும் திட்ட ஊழலில் பெர்ஜெயா குழுமத்தின் நிறுவனர் டான்ஸ்ரீ வின்சென்ட் டானுடன் சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கும் தொடர்பிருப்பதாக சனுசி குற்றஞ்சாட்டியிருந்தார்.  மாநில அரசுக்குச் சொந்தமான 600 ஏக்கர் நிலத்தை 1,000 கோடி வெள்ளி முதலீட்டில் வின்செட் டான் மேம்படுத்தவுள்ளதாகவும் அவர்  கூறியிருந்தார்.


Pengarang :