ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரின் வட பகுதிகளில் பக்கத்தானுக்கு ஆதரவு அதிகரிப்பு- வெற்றியை உறுதி செய்ய தீவிரப் பிரசாரம்

சிகிஞ்சான், ஆக 9- சிலாங்கூரின் வட பகுதியில் உள்ள தொகுதிகளில் பக்கத்தான் ஹராப்பானுக்கு தொடர்ந்து ஆதரவு அதிகரித்து வருவதாக மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பக்கத்தான் தேர்தல் இயந்திரத்தின் இடைவிடாத பிரசாரம், வேட்பாளர்களின் பின்னணி மற்றும் நடப்பு உறுப்பினர்கள் மீதான நம்பகத்தன்மை போன்றவை இந்த ஆதரவு அதிகரிப்புக்கு காரணமாக விளங்குவதாக அவர் சொன்னார்.

இங்கு நல்ல மனநிலை காண்படுவதை நான் உணர்கிறேன். நாம் மாநிலத்தின் வடபகுதியை ஒருபோதும் மறந்தது கிடையாது. ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியமானது என்பதால் நாம் தொடர்ந்து உழைப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.

மேம்பாட்டில் முனைப்புக் காட்டும் தரப்பினருக்கு வாக்களிக்கும்படி இங்குள்ள வாக்காளர்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று பெக்கான் சிகிஞ்சானில் நேற்று நடைபெற்ற ஹராப்பான் பொது பிரசாரக் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையில் மாநில அரசை பக்கத்தான் ஹராப்பான் அமைக்கும் என்றும் அவர் சொன்னார்.

தேர்தல் பிரசாரத்தின் போது பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அரசியல் தாக்குதல் நடத்தி வரும் எதிர்க் கட்சியினரை ஒரு போதும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதையும் அவர் நினைவுப்படுத்தினார்.

நாம் மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையில் அதாவது 38 முதல் 40 இடங்களைப் பெற முடியும் என நான் நம்புகிறேன். அதே சமயம், நமது எதிராளியை குறைத்தும் மதிப்பிட முடியாது. பல்வேறு விவகாரங்கள் ஒவ்வொரு நாளும் எழுப்பப்படுகின்றன. ஆயினும் யாருக்கு வாக்களிப்பது என்பதை 60 முதல் 70 விழுக்காட்டு வாக்காளர்கள் முடிவை எடுத்து  விட்டனர் என நம்புகிறேன் என்றார் அவர்.


Pengarang :