SELANGOR

அரசியல் போதும், மக்கள் களைத்து விட்டார்கள், எதிர்காலத்தை சிந்தியுங்கள்- சுல்தான் அறிவுறுத்து

கிள்ளான், ஆக 22- வரம்பு மீறிய அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதை
நிறுத்தி பொருளாதார ரீதியில் மாநிலத்தை வளர்ச்சியடையச்
செய்வதற்கான வழிவகைகளை ஆராயும்படி அனைத்துத் தரப்பினரையும்
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்
வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து மக்களும் சுபிட்சத்தையும் வளப்பத்தையும் தொடர்ந்து
அனுபவிப்பதற்கு ஏதுவாக பல்லின மக்களிடையே ஒற்றுமையை
வலுப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

அரசியல் நடத்தியது போதும், மக்கள் களைத்து விட்டார்கள். நானும்
களைப்படைந்து விட்டேன். மாநிலத்தின், நாட்டின் எதிர்காலத்தையும் நமது
பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சிந்தித்துப் பாருங்கள்
என்றார் அவர்.

நேற்று இங்குள்ள இஸ்தானா ஆலம் ஷாவில் நடைபெற்ற மாநில
ஆட்சிக்குழு உறுப்பினர்களின பதவியேற்புச் சடங்கில் உரையாற்றிய போது
அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்களின் நலனுக்காக நிலையான பொருளாதார வளர்சியின் மூலம்
மேம்பாடு, நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் மாநில அரசு
எழுச்சியும் வளர்ச்சியும் காணும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர்
தெரிவித்தார்.

புதிதாகப் பதவியேற்ற ஆட்சிக்குழு உறுப்பினர்கள் களத்தில் இறங்குவது
உள்பட சிறப்பான சேவையை வழங்கும் அதே வேளையில் ஊழல்,
அதிகாரத் துஷ்பிரேயோகம் போன்ற செயல்களில் ஈடுபடாமலிருப்பதன்
மூலம் உயர் நெறியையும் கட்டிக் காப்பார்கள் என தாம் பெரிதும்
எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :