ECONOMYMEDIA STATEMENTNATIONAL

விமான விபத்து நிகழ்ந்த பகுதியில் 10 அமெரிக்க வல்லுநர்கள் ஆய்வு

ஷா ஆலம், ஆக 21- பண்டார் எல்மினாவில்  இலகுரக  விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த  10 விமான வல்லுநர்கள் இன்று விமான விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்தனர்.

விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்காக  அவர்கள் அனைவரும் 7 முதல் 10 நாட்களுக்கு நாட்டில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக   ஷா ஆலம் மாவட்ட காவல்துறை தலைவர்  உதவி ஆணையர் முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார் .

நேற்று நாட்டிற்கு வந்த அவர்கள் இன்று காலை விசாரணையை ஆரம்பித்துள்ளனர் என்று அவர் சொன்னார்.  விமானத்தின் உடைந்த பாகங்களை  அகற்றுவதற்கான நடவடிக்கை இன்று முடிவடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவ்வாறு செய்ய முடியாவிடில் சம்பவ இடத்தில்  நிலைமையை கண்காணிக்க கூடுதல் போலீஸ்காரர்களை தொடர்ந்து நிறுத்துவோம். ஏனெனில்  எந்த எதிர்பாராத செயல்கள் நிகழ்வதை நாங்கள் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

விமான விபத்துப் புலனாய்வுப் ஆணையத்தின் (பி.எஸ்.கே.யு.) விசாரணை அதிகாரி கர்னல் முகமது அப்துல்லாவுடன் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

10 பேரை பலி கொண்ட அந்த விமான விபத்து பற்றிய விசாரணையில் எட்டு      பி.எஸ்.கே.யு  அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர் என்று முகமது இக்பால்  தெரிவித்தார்.

விமானத்தின் சிதைந்த பாகங்களை  அகற்றும் பணி நடைபெற்று வருவதும் அப்பாகங்களை  விசாரணைக்காக  சுபாங்கில் உள்ள விமானம் நிறுத்தும் மையத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு லாரி பயன்படுத்தப்படுவதும் பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டது.

முன்னதாக, அந்த விமான விபத்து தொடர்பான விசாரணையின் முதற்கட்ட அறிக்கை விமான விபத்து நடந்த தினத்திலிருந்து  30 நாட்களுக்குள் தயாரிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு  அறிக்கையில்  முன்னதாக தெரிவித்திருந்தது.

கடந்த வியாழன் அன்று, பண்டார் எல்மினா  அருகே கத்ரி நெடுஞ்சாலையில் பீச்கிராஃப்ட் மாடல் 390 (பிரீமியர் 1) விமானம் விழுந்து நொறுங்கியதில் பகாங் மாநில உள்ளாட்சி, வீட்டுவசதி, சுற்றுச்சூழல் மற்றும் பசுமைத் தொழில்நுட்பத் துறைக்கான ஆட்சிக்குழு  உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோஹாரி ஹருண் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்தவர்களில் ஆறு பயணிகள்  மற்றும் இலகுரக விமானத்தின் இரண்டு விமானிகளும் அடங்குவர். விபத்து நிகழ்ந்த போது அச்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளோட்டி மற்றும் கார் ஓட்டுனர் ஆகியோரும் பலியாகினர்.


Pengarang :