NATIONAL

விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைந்த பாகங்களை அகற்றும் பணி முற்றுப் பெற்றது

ஷா ஆலம், ஆக 22- இங்குள்ள பண்டார் எல்மினா அருகே கத்ரி
நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை விபத்துக்குள்ளான இலகு ரக
விமானத்தின் சிதைந்த பாகங்களை அகற்றும் பணி நேற்று முற்றுப்
பெற்றது.

இதனைத் தொடர்ந்து விபத்து நிகழ்ந்த பகுதி நேற்று முதல் காலி
செய்யப்படுவதாகச் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ
ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

இதுநாள் வரை அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போலீஸ் பாதுகாப்பு
நடவடிக்கைகளும் நிறுத்தப்படும் என்று பெர்னாமா செய்தி நிறுவனத்திடம்
அவர் தெரிவித்தார்.

இதனிடையே, சம்பவ இடத்தில் பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில்
விமானத்தின் சிதைந்த மற்றும் சிதறிய பாகங்கள் நேற்றிரவு 7.00
மணியளவில் லோரி மூலம் அகற்றப்படுவதைக் காண முடிந்தது.
அந்த சாலை போக்குவரத்துக்கு தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில்
அச்சாலையைத் துப்புரவு செய்யும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு
வருகிறது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மஞ்சள் நாடாவையும் போலீசார்  அகற்றியுள்ளனர்.

இந்த விமான விபத்து தொடர்பான முதல் கட்ட அறிக்கை சம்பவம்
நிகழ்ந்த 30 நாட்களுக்குள் தயாராகி விடும் என்று போக்குவரத்து துறை
அமைச்சர் அந்தோணி லோக் முன்னதாக கூறியிருந்தார்.

இந்த விமான விபத்தில் பகாங் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ
ஜோஹாரி ஹருண் உள்பட ஆறு பயணிகளும் இரு விமானிகளும்
உயிரிழந்தனர். இவர்கள் தவிர, சம்பவம் நிகழ்ந்த போது அச்சாலையில்
பயணித்துக் கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளோட்டி மற்றும் ஒரு
கார் ஓட்டுநர் ஆகியோரும் பலியாகினர்.


Pengarang :