ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரில் அரிசி போதுமான அளவு உள்ளது- அடுத்த மாதம் விநியோகம் சீரடையும்

ஷா ஆலம், செப் 22- வெள்ளை அரசி பற்றாக்குறை தொடர்பில் நாடு முழுவதும் கவலை எழுந்திருந்தாலும் சிலாங்கூரில் இம்மாதம் இறுதி வரைக்கும் அந்த உணவுப் பொருளின் கையிருப்பு போதமான அளவு உள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தீபகற்ப மலேசியாவின் வடபகுதியில் நெல் மறுஉற்பத்தி மற்றும் சிலாங்கூரில் மேற்கொள்ளப் படவிருக்கும் அரிசி அறுவடை ஆகிய காரணங்களால் அடுத்த மாதம் தொடங்கி அரிசி விநியோகம் நிலைப்பெறும் என்று அவர் சொன்னார்.

சிலாங்கூரைப் பொறுத்த வரை மாதம் ஒன்றுக்கு 45,500 மெட்ரிக் டன் வெள்ளை அரசி தேவைப்படுகிறது. இந்த தேவையின் அடிப்படையில் பார்த்தால் சிலாங்கூரிடம் செப்டம்பர் மாதம் இறுதிவரைக்கும் போதுமான கையிருப்பு உள்ளது என்றார் அவர்.

அரசி தொடர்ந்து கட்டுப்படி விலையில் இருப்பதை உறுதி  செய்வதற்கு மாநில அரசு தனது குடிமக்களுக்கு  5 கிலோ அரிசியை 13.00 வெள்ளி விலையில் விற்கவுள்ளது என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சந்தையை விட குறைவான விலையில் அரிசியை விற்கும் இந்த நடவடிக்கை சிலாங்கூர் மாநில விவசாயக் கழகத்தின் நான்கு விற்பனைக் கூடங்கள் மற்றும் தினசரி மேற்கொள்ளப்படும்  மூன்று நடமாடும் விற்பனை திட்டங்கள் வாயிலாக இவ்வாண்டு இறுதி வரை அமல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

அரிசி பற்றாக்குறை பிரச்சனையைக் கண்காணித்து அதற்கு தீர்வு காணும் வகையில் சிலாங்கூர் அரசி மற்றும் நெல் ஒழுங்கு முறை அமைப்பை மாநில அரசு அமைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடு  முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அரிசி பற்றாக்குறை பிரச்சனைக்கு பதட்டம் காரணமாக  பொது மக்கள் அந்த உணவுப் பொருளை அதிகளவில் வாங்குவதே காரணம் என்றும் அவர் சொன்னார்.

பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்திய விதித்த தடை காரணமாக அரிசி பற்றாக்குறை தொடர்பான பதட்டம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டது. இதுதவிர, வானிலை மற்றும் நோய்களால் நெல் உற்பத்திக்கு ஏற்பட்ட பாதிப்பும் இதர காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது என்றார் அவர். 


Pengarang :