செய்தி ; சு. சுப்பையா
செமிஞ்சே அக்.8- உலு லங்காட் நாடாளுமன்ற தொகுதி ரிஞ்சிங் வட்டாரத்தில் உள்ள 3 தமிழ்ப் பள்ளிகளும், இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டு இயக்கம், உலு லங்காட் மக்கள் நீதிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மித்ராவின் உதவியுடன் இணைந்து ஏற்பாடு செய்த சமூக பொருளாதார மேம்பாட்டு நிகழ்வுக்கு வற்றாத ஆதரவு நல்கினர்.
டொமினிக் தோட்ட தமிழ்ப்பள்ளி, ரிஞ்சிங் தோட்ட தமிழ்ப்பள்ளி, செமினி தோட்ட தமிழ்ப்பள்ளி ஆகியவைகளின் தலைமை ஆசிரியர்களும் நிகழ்ச்சி வெற்றி பெற முழு ஒத்துழைப்பு நல்கினர்.
செமினி தோட்ட தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன், டொமினிக் தோட்ட தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் மேனகா பொன்னையா, ரிஞ்சிங் தோட்ட தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் க.சுந்தரி, துணைத் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இம்மூன்று பள்ளிகளும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளது. ஆத்திச்சூடி சொல்வதில் உலக சாதனை, இந்தோனேசியாவில் நடைபெற்ற அறிவியல் விழாவில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது. உலு லங்காட் ஆரம்ப பள்ளிகளுக்கிடையிலான ஹாக்கி போட்டியில் முதல் இடத்தை பெற்று உலு லங்காட் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள இப்பள்ளிகள் சாதனை படைத்துள்ளது. அதை சிறப்பிக்கும் வண்ணம் அம்மூன்று பள்ளிகளுக்கும் தலா ரி.ம. 500 ஊக்குவிப்பு பரிசு வழங்கப் பட்டது.
மாணவர்களுக்கு சொல்வதெழுதுதல், வர்ணம் தீட்டும் போட்டி, ஆடை அலங்கார போட்டிகள் நடத்தினர். இப்போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.
இதில் 50 மாணவர்கள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.பல பிரிவுகளுக்கு முதல் பரிசாக மிதிவண்டிகள் ( சைக்கிள்கள் ) வழங்கப்பட்டன மேலும் இப் போட்டி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட எல்லா மாணவர்களும் ஆறுதல் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர் ஏற்பாட்டுக் குழுவினர். இங்கு, இதில் 500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் திரண்டு வந்து கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சானி ஹம்சான் அதிகாரப்பூர்வமாக திறந்து உரையாற்றினார். அரங்கம் நிறைந்த மக்களை கண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்பாட்டு குழுவினரை மகிழ்ச்சியில் வெகுவாக பாராட்டினார்.