NATIONAL

பாலஸ்தீன – இஸ்ரேல் மோதல் – பயணத்தை ஒத்தி வைக்க மலேசியர்களுக்கு விஸ்மா புத்ரா அறிவுறுத்து

புத்ராஜெயா அக் 11- பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே
கடுமையானப் போர் நிகழ்ந்து வரும் நிலையில் அந்த வட்டாரத்திற்கு
பயணம் மேற்கொள்ள திட்டமிட்டவர்கள் தங்கள் பயணத்தை ஒத்தி
வைக்குமாறு வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) கேட்டுக்
கொண்டுள்ளது.

அந்த பகுதிக்கு செல்ல விரும்பும் அரசு சாரா அமைப்புகள் தங்கள் திட்டம்
தொடர்பில் வெளியுறவு அமைச்சுடன் முன்கூட்டியே
கலந்தாலோசிக்கும்படி விஸ்மா புத்ரா இன்று வெளியிட்ட அறிக்கை
ஒன்றில் கூறியது.

தற்போது ஒரு பெண்மணி, ஒரு தாய் மற்றும் அவரின் மூன்று பிள்ளைகள்
உள்பட ஐந்து மலேசியர்கள் மேற்கு கரையில் உள்ளனர். அம்மானில்
உள்ள மலேசியத் தூதரகம் அவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறது
என்று அது தெரிவித்தது.

போர் பகுதியில் உள்ள தங்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும்
அறிமுகமானவர்கள் குறித்த தகவல்களை மலேசியர்கள் வெளியுறவு
அமைச்சிடம் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 7ஆம் தேதி முதல் நிகழ்ந்த வரும் உக்கிரமானப் போரில்
பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு உயிர்ப்பலி ஏற்பட்டது மற்றும்
அப்பாவி பொதுமக்கள் காயங்களுக்குள்ளானது குறித்து மலேசியா மிகுந்த
வருத்தம் அடைவதாக விஸ்மா புத்ரா கூறியது.

பொது மக்கள் குடியிருப்புகள் மீது வரம்பு மீறி குண்டுவீசித் தாக்குதல்
நடத்தி வருவதோடு நீர், மின்சாரம் மற்றும் உணவு போன்ற அப்படைத்
தேவைகளையும் தடுத்து நிறுத்திய இஸ்ரேலின் நடவடிக்கையை
மலேசியா வன்மையாக கண்டிப்பதாகவும் அது குறிப்பிட்டது.


Pengarang :