ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தேக்காட் கித்தா சிலாங்கூர்- நான்கு வாக்குறுதிகள் நிறைவேற்றம்- புத்தக பற்றுச் சீட்டு திட்டம் அடுத்த வாரம் அமல்

கோம்பாக், நவ 5- கடந்த மாநிலத் தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட தேக்காட் கித்தா சிலாங்கூர் எனும் ஐந்து வாக்குறுதிகளில் நான்கு மாநில அரசு ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் நிறைவேற்றப்பட்டன.

நான்கு வாக்குறுதிகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில் ஐந்தாவது வாக்குதியான கித்தா சிலாங்கூர் புத்தக பற்றுச்சீட்டு திட்டம் அடுத்த வாரம் தொடங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அனைத்து வாக்குறுதிகளையும் நாம் நிறைவேற்ற விரும்புகிறோம். நான்கு வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட வேளையில் இறைவன் அருளால் ஐந்தாவது வாக்குறுதியான புத்தக பற்றுச்சீட்டு திட்டம் அடுத்தவாரம் அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

தொடக்க க் கட்டமாக 200 முதல் 500  பட்டதாரிகளுக்கு பற்றுச் சீட்டுகளை வழங்கவிருக்கிறோம். இவ்வாண்டு பட்ஜெட் கட்டுக்குள் இருப்பதால் வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அவர் சொன்னார்.

பத்து கேவ்ஸ், வீரா டாமாய், டேவான் கம்போங் மிலாயுவில் ஜெலாஜா மடாணி நிகழ்வில் மனிதவள அமைச்சர் வீ.சிவக்குமாருடன் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தேக்காட் கித்தா சிலாங்கூர் முன்னெடுப்பில் அறிவிக்கப்பட்ட ஐந்து வாக்குறுதிகளில் குழந்தை பராமரிப்புக்காக தாய்மார்களுக்கு 1,000 வெள்ளி வழங்கும் மாமாகெர்ஜா திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் வழி சுமார் 5,000 மகளிர் பயன் பெறுவர்.

இது தவிர, 426,656 மலிவு விலை மற்றும் கிராம வீடுகளுக்கு இவ்வாண்டு இரண்டாம் தவணையாக மதிப்பீட்டு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இத்திட்டம் 2 கோடியே 94 லட்சத்து 15 ஆயிரம் வெள்ளியை உள்ளடக்கியுள்ளது.


Pengarang :