ANTARABANGSAMEDIA STATEMENT

பிலிப்பைன்சில் பூகம்பம்- பொது மக்கள் கட்டிடங்களிலிருந்து வெளியேற்றம்

மணிலா, டிச 6 – பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று  ரிக்டர் அளவில் 5.9 எனப் பதிவான நிலநடுக்கம்   ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து  தொழிலாளர்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் கட்டிடங்களை உடனடியாகக் காலி செய்தனர்.

இப்பேரிடரில் உயிரிழப்புகள் பற்றிய உடனடித் தகவல் எதுவும் இல்லை. சேதத்தை  தாங்கள் எதிர்பார்க்கவில்லை என எக்ஸ் பதிவில் கூறிய நில அதிர்வு மையம் எனினும் பூகம்பத்திற்கு பிந்தைய நில அதிர்வுக்கான சாத்தியம் குறித்து எச்சரித்தது.

ரிக்டரில்  5.9 எனப் பதிவான இந்த நிலநடுக்கம் 79 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவானது.  தலைநகர் பகுதியில் இருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் இது மையமிட்டிருந்தது.

நாங்கள் வலுவான மற்றும் நீண்ட நேரம் நீடித்த  நடுக்கத்தை உணர்ந்தோம். கட்டிடம் அதிரும்போது,  நாங்கள் விரைந்து வெளியேறினோம் என்று ஆக்சிடென்டல் மிண்டோரோ மாநிலத்தில் உள்ள லுபாங் நகரத்தின் மேயர் மைக்கேல் ஒராயானி தெரிவித்தார்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2ஆகப் பதிவானதாக  ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தொடக்கத்தில் கூறியது.பின்னர் அதன் அளவை  6.0 ஆகக் அது குறைத்தது.

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும்.  இந்நாடு பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள எரிமலைகளின் பெல்ட் “நெருப்பு வளையத்தில்” உள்ளது, இதனால் இங்கு நில அதிர்வு அதிகம் ஏற்படுகிறது.


Pengarang :