ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூர் அரசின் இவ்வாண்டு வருமானம் 257.1 கோடி வெள்ளி- நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 28% அதிகம்

கிள்ளான், டிச 11- இவ்வாண்டு டிசம்பர் 6ஆம் தேதி வரை மாநில அரசு 257
கோடியே 10 லட்சம் வெள்ளியை வருமானமாக ஈட்டியுள்ளது. ஏற்கனவே
நிர்ணயிக்கப்பட்ட இவ்வாண்டிற்கான வருமான இலக்கான 200 கோடி
வெள்ளியை விட இது 28 விழுக்காடு அதிகமாகும்.
மக்கள் நலனுக்காக பொருளாதாரத்தை உயர்த்துவதை இலக்காகக்
கொண்ட மாநில அரசு நிர்வாகத்தின் கடப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த
அடைவு நிலை விளங்குவதாக மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவின் 78வது
பிறந்த நாளை முன்னிட்டு இங்குள்ள இஸ்தானா ஆலம் ஷா, பாலாய்
ரோங்ஸ்ரீயில் நடைபெற்ற நிகழ்வில் ஆற்றிய அரச விசுவாச உரையில்
அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் மக்களின்
நலனுக்காக வருமானத்தை அதிகரிப்பதற்கும் மேன்மை தங்கிய சுல்தான்
அரசாங்கத்தின் பொதுச் சேவை மற்றும் நிர்வாகத்தினர் மேற்கொண்டு
வரும் தீவிர முயற்சிகளின் வழி கிடைத்த வெற்றியை இந்த அடைவு
நிலை பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
மாநிலத்தின் வளங்கள் ஆக்ககரமான முறையிலும் இலக்கிடப்பட்ட
வகையிலும் பகிர்ந்தளிப்பதில் கடைபிடிக்கப்படும் நேர்மை மக்கள் மற்றும்
முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது இதன் மூலம்
தெரிய வருகிறது என்றார் அவர்.
மாநில ஆட்சியாளருக்கு தனது உறுதியான விசுவாசம் மற்றும்
அர்ப்பணிப்பையும் மாநிலத்தை திறம்பட வழி நடத்துவதற்கான தனது
கடப்பாட்டையும் மந்திரி புசார் தமதுரையில் வலியுறுத்தினார்.
ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு பகுதியாக விளங்கும் தனது அரசாங்கம்
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் மற்றும் மாநில சட்டங்களை தொடர்ந்து
நிலை நிறுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Pengarang :