ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஏழு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இரு லோரி ஓட்டுநர்கள் பலி- கோப்பெங்கில் சம்பவம்

ஈப்போ, பிப் 3- ஏழு வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர சாலை விபத்தில் இரு லோரி ஓட்டுநர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 288.1வது கிலோ மீட்டரில் வடக்கு நோக்கிச் செல்லும் தடத்தில் இன்று அதிகாலை  நிகழ்ந்தது.

இந்த சாலை விபத்தில் மூன்று லோரிகளும் நான்கு கார்களும் சம்பந்தப்பட்டிருந்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் சபோரோட்ஸி நோர் அகமது கூறினார்.

இந்த விபத்தில் சீனி மற்றும் இரும்புப் பொருள்கள் ஏற்றிய இரு லோரிகளின் ஓட்டுநர்கள் வாகன இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறிய அவர், அவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன என்றார்.

இவ்விபத்தின் காரணமாக அந்த நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. லோரியிலிருந்து கொட்டிய சீனி நெடுஞ்சாலை முழுவதும்  சிதறிக் கிடக்கும் நிலையில் அதனைச் சுத்தப்படும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, விபத்து நிகழ்ந்த பகுதியில் வாகனப் போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ளதாக பிளஸ் நிறுவனம் தனது எக்ஸ் பதிவில் கூறியது.

சிம்பாங் பூலாய் மற்றும் கோம்பேங் டோல் சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுங்கள் என அந்நிறுவனம் வாகனமோட்டிகளைக் கேட்டுக் கொண்டது.


Pengarang :