ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

சுடும் ஆயுதமேந்திய ஆடவன்  போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி

ஜித்ரா, பிப் 17- சுடும்  ஆயுதம் வைத்திருந்த குற்றவாளி என சந்தேகிக்கப்படும் ஆடவன் ஒருவன் போலீசாருடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தான். இச்சம்பவம் இங்குள்ள நாப்போ, ஜாலான் புக்கிட் கிச்சிலில் நேற்று மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்தது.

அந்த சாலையில் ஓப் லாராஸ் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவின் (டி9) போலீஸ் குழு ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட வாகனம் ஒன்றைத் தடுத்து நிறுத்த முயன்றதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஃபிசோல் சால்லே கூறினார்.

எனினும், அந்த காரிலிருந்த சந்தேகப் பேர்வழி நிற்காமல் வேகமெடுக்க முயன்ற வேளையில் அக்கார் கட்டுபாட்டை இழந்து சாலையின் இடது பக்கத்தில் நின்றது. காரிலிருந்த அவ்வாடவன் போலீசாரை நோக்கி இரு முறை துப்பாக்கி வேட்டு கிளப்பினான் என்று அவர் சொன்னார்.

போலீசார் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் நோக்கில் பதிலுக்கு துப்பாக்கி பிரயோகம் நடத்தினர். இத்துப்பாக்கிச் சூட்டில் 57 வயதுடைய அவ்வாடவன் சம்பவ இடத்தில் உயிரிழந்தான் என அவர் தெரிவித்தார்.

அந்த காரிலிருந்து இரு துப்பாகிகள் மற்றும் கணிசமான எண்ணிக்கையிலான தோட்டாக்களை நாங்கள் கைப்பற்றினோம். 100  ஒன்பது மில்லி மீட்டர் தோட்டாக்களோடு  நூறு 38 மில்லி மீட்டர் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன. இது தவிர எம்-16 ரைபிள்களுக்கு பயன்படுத்தப்படும் 5.56 ரக தோட்டாக்களும் அங்கு கண்டு பிடிக்கப்பட்டன என்று நேற்றிரவு சம்பவ இடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் குறிப்பிட்டார்.

இத்தாக்குதலில் பலியான ஆடவனுக்கு போதைப் பொருள் மற்றும் போலி ஆயுதங்கள் வைத்திருந்தது தொடர்பில் நான்கு குற்றப்பதிவுகள் உள்ளது தொடக்க க் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

இந்த சம்பவம் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 307 மற்றும் 1960ஆம் ஆண்டு சுடும் ஆயுதச் சட்டத்தின் 8 வது  பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.


Pengarang :