NATIONAL

ஆஸி. நிறுவனங்களின் உயர்மட்டத் தலைவர்களுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு

மெர்போர்ன், மார்ச் 5 – ஆஸ்திரேலியாவுக்கு பணி நிமித்தப் பயணம்
மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அந்நாட்டின் 18
முன்னணி நிறுவனங்களின் உயர் நிர்வாகத் தலைவர்களுடன் இன்று
மெல்போர்னில் சந்திப்பு நடத்தினார். மலேசியாவில் தங்களின்
வர்த்தகங்களையும் முதலீடுகளையும் அதிகரிப்பதற்கு ஊக்குவிக்கும்
நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டது.

வட்ட மேசை மாநாடு தவிர்த்து, முதலீட்டாளர்களின கருத்துகளைப்
பெறுவதற்காக அந்த முதலீட்டாளர்களுடன் தனிப்பட்டச் சந்திப்பையும்
நிதியமைச்சருமான அவர் நடத்தினார்.

மருத்துவ உபகரணங்கள் மற்றும் எஃகு உள்ளிட்ட உற்பத்தித் துறை, தரவு
மையம், நிதி மற்றும் வர்த்தகம் போன்ற சேவைத் துறையைச் சேர்ந்த
முதலீட்டாளர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு நிகழ்வில் பேசிய அன்வார், எப்போதும் இல்லாத அளவுக்கு
முதலீடுகளை ஈர்ப்பதற்காக தெளிவான மற்றும் ஆகக்கரமான
கொள்கைகளை தனது தலைமையிலான மலேசிய அரசாங்கம்
அமல்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நடப்பு அரசாங்கம் நிலைத்தன்மையுடன் உள்ளது. மலேசியாவுக்கு
முதலீட்டை ஈர்ப்பதற்கான முக்கிய அம்சமாகவும் இது விளங்குகிறது.
நாங்கள் தெளிவான புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இதன் விளைவாக எப்போதும் இல்லாத அளவுக்கு உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில இப்போது ஈர்த்துள்ளோம் என்றார்
அவர்.

கடந்தாண்டு 32,950 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீடுகளை மலேசியா
ஈர்த்துள்ளதாக அன்வார் கடந்த மாதம் கூறியிருந்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டை விட இது 23 விழுக்காடு அதிகமானது என்பதோடு நாட்டின்
வரலாற்றில் மிக உயர்வானதும் ஆகும் என்றார் அவர்.


Pengarang :