NATIONAL

போதைப்பொருள் கடத்தல் கும்பலை சரவாக் காவல்துறையினர் முறியடித்தனர்

கூச்சிங், மார்ச் 19: வடக்கு சரவாக்கின் மிரியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றை சரவாக் காவல்துறையினர் முறியடித்தனர். அக்கும்பல் ஒரு சிலிண்டர் கேஸில் மறைத்து வைத்திருந்த ரிங்கிட் 700,000க்கும் அதிகமான 21.7 கிலோகிராம் மெத்தாம்பேட்டமைன் அல்லது சியாபு காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சோதனையில் 28 முதல் 50 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாகப் புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJN) இயக்குநர் டத்தோ காவ் கோக் சோங் கூறினார்.

“இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இக்கும்பல் செயல்பாட்டில் உள்ளது. அதாவது தீபகற்பத்திலிருந்து மருந்துப் பொருட்களைப் பெறுவதும், பின்னர் சிலிண்டர் கேஸ்களை மாற்றியமைப்பதும் மற்றும் அண்டை நாடுகளுக்கு விற்பனை செய்ய நியமிக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு அவற்றில் போதைப்பொருளை வைப்பதும் ஆகும்.

இந்த சோதனை நடவடிக்கையில் ரிங்கிட் 52,000 ரொக்கமும், ரிங்கிட் 54,941.40 மதிப்பிலான நகைகளும், ரிங்கிட் 194,000 மதிப்புள்ள நான்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன, மொத்தத் மதிப்பு 1.02 மில்லியன் ரிங்கிட் ஆகும்,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மருத்துவப் பரிசோதனையில் சந்தேக நபர்களில் ஒருவர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பதும், முந்தைய குற்றப் பதிவு கொண்டிருப்பதும் தெரியவந்ததாகக் காவ் கூறினார்.

இந்த வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் விசாரிக்கப்பட்டது மற்றும் சந்தேக நபர்கள் அனைவரும் மூன்று நாட்களுக்குத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

– பெர்னாமா


Pengarang :