SELANGOR

இஸ்லாத்தை அவமதித்த ஆடவருக்கு ஆறு மாதச் சிறை, வெ.12,000 அபராதம்

கோலாலம்பூர், மார்ச் 23 – இஸ்லாத்தை இழிவுபடுத்தியதாகச் சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டை  ஒப்புக்கொண்ட தொழில்நுட்ப வல்லுநருக்கு 6 மாதச் சிறைத்தண்டனையும்  12,000 வெள்ளி அபராதமும் விதித்து இங்குள்ள  செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சியோக் வாய் லோங் (வயது 35) என்ற அவ்வாடவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை அவர் கைது செய்யப்பட்ட தினமான மார்ச் 20-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக  நீதிபதி சுசானா ஹூசேன் உத்தரவிட்டார்.

கடந்த மார்ச் 18ஆம் தேதின்று ‘சியோக் வாய் லோங்’ என்ற சுயவிவரப் பெயரில் ‘அல்லா’ என்ற வார்த்தையைத் தாங்கிய காலுறைகள் விற்பனை செய்வது தொடர்பில் அவதூறான உள்ளடக்கத்தை பேஸ்புக்கில் வெளியிட்டதாக சியோக் மீது குற்றம் சாட்டப்பட்டது.

1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின்  231(1)(a) வது பிரிவு மற்றும் அதே சட்டத்தின் துணைப்பிரிவு 233(3) இன் கீழ் அவ்வாடவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இச்சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு ஒரு வருடம் வரையிலான சிறைத்தண்டனை அல்லது 50,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

முன்னதாக விசாரணையின் போது, இவ்விவகாரம் தொடர்பில் காவல் துறையில் செய்யப்பட்ட 24 புகார்களை மேற்கோள் காட்டிய துணை அரசு வழக்கறிஞர் டத்தின் கல்மிசா சாலே, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு  நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவ்வாடவர் வெளியிட்ட பதிவுப இஸ்லாத்தை அவமரியாதை செய்வதாக உள்ளது. மலேசியாவில்  பல இன மக்கள் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுகிறார்கள். மரியாதை காட்டுவது மிகவும் முக்கியமானது என்பதோடு புறக்கணிக்கப்படவும் கூடாது என்று அவர் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

கே கே.மார்ட்  பல்பொருள் அங்காடிக் கடையில்  “அல்லாஹ்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட காலுறைகள் விற்பனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இஸ்லாத்தை அவமதித்ததாகக் கூறப்படும் சமூக ஊடகப் பதிவு தொடர்பாக விசாரணைக்கு உதவ ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளதாகப் பெர்னாமா நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.


Pengarang :