NATIONAL

இரவு விடுதியில் கைகலப்பு- அந்நியப் பிரஜை குத்தியதில் ஆடவர் மரணம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28: இரவு விடுதி ஒன்றில் இருவர் முழங்கையால் இடித்துக் கொண்டச் சம்பவம் மரணத்தில் முடிந்தது. கடந்த சனிக்கிழமை இரவு நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஆடவர் ஒருவர் உயிரிழந்த வேளையில் அந்நிய பிரஜை ஒருவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்ட சம்பவத்தின் விளைவாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது 40 வயது மதிக்கத்தக்க அந்நிய பிரஜை விட்ட பலமான குத்து உள்நாட்டவரான 40 வயது நபரின் உயிரைப் பறித்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷஹாருள் நிஸாம் ஜாபர் கூறினார்.

பின்னிரவு 1.00 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறிய அவர், அந்த இரவு விடுதியில் நடந்து சென்று கொண்டிருந்த அந்நிய பிரஜை பாதிக்கப்பட்ட நபரை முழங்கையால் இடித்ததாக கூறப்படுகிறது என்று சொன்னார்.

பாதிக்கப்பட்ட நபரின் நண்பரும் இந்த சச்சரவில் சம்பந்தப் பட்டதைத் தொடர்ந்து அங்கு கைகலப்பு மூண்டது. அச்சமயம் அந்நிய பிரஜை முகத்தில் பலமாக குத்தியதால் அவ்வாடவர் பின்புறமாக விழுந்து தலையின் பின்புறத்தில் பலத்த காயங்களுக்குள்ளானார் என்றார் அவர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகப் பேர்வழி குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் விசாரணைக்கு வரும் 29ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார் நேற்று இங்குள்ள மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் சொன்னார்.

இந்த சம்பவத்தில் இறந்த நபரின் நண்பரும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, மாவட்ட  போலீசார் மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளின் மூலம வழிப்பறிக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு  பெண் உட்பட மூன்று வெளிநாட்டினரும் காரிலிருந்து பொருட்களை திருடியதாக நம்பப்படும் உள்நாட்டு ஆடவனும் கைது செய்யப்பட்டனர் என்றார் அவர்.


Pengarang :