ECONOMYhealthNATIONAL

கிளந்தான் மாநிலத்தில் கக்குவான் இருமலுக்கு இரண்டு மாதக் குழந்தை பலி

கோத்தா பாரு, மார்ச் 28- இவ்வாண்டின் 12 வது வாரம் வரையிலான காலக் கட்டத்தில் கக்குவான் இருமல் தொற்று காரணமாக கிளந்தான் மாநிலத்தில் ஒரு மரணச் சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இரண்டு மாதக் குழந்தையை சம்பந்தப் படுத்திய அந்த மரணச் சம்பவம் தானா மேராவில் கடந்த மாதம் பதிவு செய்யப் பட்டதாக வீடமைப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹில்மி அப்துல்லா கூறினார்.

நேற்று வரை கோத்தா பாரு, தானா மேரா, கோல கிராய், பாசீர் பூத்தே, தும்பாட், குவா மூசாங் ஆகிய மாவட்டங்களில் 29 கக்குவான் இருமல்  சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று அவர் சொன்னார்.

கிளந்தான் மாநிலத்தின் தானா மேரா, பாசீர் பூத்தே, கோத்தா பாரு ஆகிய மூன்று மாவட்டங்கள் நோய்த் தொற்றுப் பகுதிகளாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்தாண்டின் முதல் 12 வாரங்களில் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒன்றாக மட்டுமே பதிவாகியிருந்தது. இந்த எண்ணிக்கை வேறுபாட்டைப் பார்க்கையில் கிளந்தான் மாநிலத்தில் கக்குவான் இருமல் சம்பவங்கள் அதிகரித்து வருவது புலனாகிறது என்றார் அவர்.

இவ்வாண்டில் கிளந்தான் மாநிலத்தில் பதிவான 29 கக்குவான் இருமல் சம்பவங்களில் 22 அல்லது 76 விழுக்காடு ஒன்று முதல் ஐந்து மாதக் குழந்தைகளை உட்படுத்தியிருந்தது என்று அவர் கூறினார்.

கடந்தாண்டு முழுவதும் 90 கக்குவான் இருமல் சம்பவங்கள் பதிவான வேளையில் ஐவர் அந்நோய்க்கு பலியாகினர். 35வது நோய்த் தொற்று வாரத்திற்குப் பின் இந்த சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கண்டன என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :