ECONOMYNATIONAL

நில விற்பனையில் மோசடி- ‘டத்தோ‘வுக்கு எதிராக போலீஸ் புகார்

கோலாலம்பூர், மார்ச் 28- சிப்பாங்கில் உள்ள நிலத்தை 14 லட்சம் வெள்ளிக்கு விற்பனை செய்வதில் டத்தோ அந்தஸ்து கொண்ட வழக்கறிஞர் ஒருவர் தன்னை ஏமாற்றி விட்டதாக நில உரிமையாளர் ஒருவர் போலீசில் புகார்  செய்துள்ளார்.

ஐம்பத்து நான்கு வயதுடைய அந்த ஆடவரிடமிருந்து கடந்த மார்ச் 16ஆம் தேதி தாங்கள் இப்புகாரைப் பெற்றதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ரம்லி முகமது யூசுப் கூறினார்.

சம்பந்தப்பட்ட அந்த ஆடவர் தனது பூர்வீகச் சொத்தான நிலத்தை விற்பனை செய்வது தொடர்பில் அந்த டத்தோவைச் சந்தித்ததோடு விற்பனைக் கொள்முதல் பணிகளை கவனிக்கும் பொறுப்பை அவரின் நிறுவனத்திடமே வழங்கியதாக ரம்லி சொன்னார்.

அந்த நிலம் 14 லட்சம் வெள்ளிக்கு விற்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் 381,110 வெள்ளி வழங்கப்பட்டு விட்டது. நில விற்பனை பணிகளை மேற்கொண்டு உள்நாட்டு வருமான வரி வாரியத்திற்கு செலுத்த வேண்டிய வரி  போக மீதத் தொகையை நில உரிமையாளரிடம் வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் நிபந்தனையாகும்.

எனினும், தற்போது வரை அந்த வழக்கறிஞர் தனது பொறுப்பை நிறைவேற்றத் தவறியதோடு எஞ்சிய பணத்தையும் செலுத்தவில்லை எனக் கூறிய அவர், இந்த புகார் தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 409வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

நேற்று இங்கு புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறையின் வாராந்திர செய்தியாளர் விளக்கமளிப்பு நிகழ்வில் அவர் இதனைக் கூறினார்.

இதனிடையே, சபா மாநிலத்தில் 745,685 வெள்ளி இழப்பை உட்படுத்திய சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை மோசடி புகார் தொடர்பில் தமது துறை ஐந்து விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :