ECONOMYMEDIA STATEMENT

நாடு முழுவதும் அக்ரோ மடாணி விற்பனை மூலம் வெ.3.35 கோடி வெள்ளி வருமானம் 

கங்கார், மார்ச் 28- நாடு முழுவதும் நேற்று வரை நடத்தப்பட்ட 1,617 அக்ரா மடாணி விற்பனை திட்டங்களின் வாயிலாக 3 கோடியே 35 லட்சம் வெள்ளி வருமானமாகப் பெறப்பட்டது.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்தின் வாயிலாக சுமார் 852,000 பேர் பயனடைந்ததோடு கிட்டத்தட்ட ஒரு கோடி வெள்ளியை அவர்கள் சேமிப்பதற்குரிய வாய்ப்பும் கிட்டியது என்று ஃபாமா எனப்படும் கூட்டரசு வேளாண் பொருள் சந்தை வாரியத்தின் இயக்குநர் வாரிய உறுப்பினர் டாக்டர் முகமது சோஃபி ரசாக் கூறினார்.

நேற்று வரை, நாடு முழுவதும் அக்ரோ மடாணி விற்பனை இயக்கங்களில் 20,700 தொழில்முனைவோர் பங்கேற்றனர் என்று இங்குள்ள குரோங் பாத்தாங்கில் நேற்று நடைபெற்ற ஜெலாஜா செந்தோஹான் காசே ரமலான் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் பெர்லிஸ் மாநில ஃபாமா இயக்குநர் முகமது அன்சாரா அஜிசான் மற்றும் பெர்லிஸ் தலைமை இமாம் அகமது சிராஜூடின் அப்துல் சாத்தாரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பெர்லிஸ் மாநிலத்தைச் சேர்ந்த பேறு குறைந்த 500 பேருக்கு  அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

புனித நோன்பு மாதத்திற்கு சிறப்பினை ஏற்படுத்துவது மற்றும் ஃபாமா தொழில்முனைவோர் தங்கள் வருமானத்தை சமூக நடவடிக்கைகள் வாயிலாக பகிர்ந்து கொள்வது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த ஜெலாஜா செந்தோஹான் காசே நிகழ்வு நடத்தப்படுகிறது.

 


Pengarang :