NATIONAL

‘பாடு’ பதிவு நடவடிக்கைக்கு மேலும் 300 முகப்பிடங்கள்

மலாக்கா, மார்ச் 29 –  மத்திய தரவுத்தள மையத்தில் (பாடு) பதிவு செய்வதற்கான காலக்கெடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் (மார்ச் 31) முடிவடையவுள்ள நிலையில்   அந்த மையத்தில் தகவல்களைப் பதிவு செய்வதற்கு ஏதுவாக மலேசிய புள்ளி விபரத் துறை  நாடு முழுவதும் மேலும்  300  முகப்பிடங்களைத் திறந்துள்ளது.

கடைசி நிமிடத்தில் பதிவுசெய்வதற்கு அதிக மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தற்போதுள்ள 6,000 பதிவு மையங்களுடன் கூடுதலாக 300 மையங்கள் திறக்கப்படுகின்றன என்று தலைமைப் புள்ளி விபரத் துறை நிபுணர் டத்தோஸ்ரீ முகமது  உஸிர் மாஹிடின் கூறினார்.

இறுதி நாளில் இந்த முகப்பிடங்களில் மாலை 5 மணி வரை மட்டுமே வரிசை எண்களை வழங்கப்படும்.  ஏனென்றால் நேரக் கட்டுப்பாடு  விதிக்காவிட்டால்  மக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பார்கள்  என்பது எங்களுக்குத் தெரியும் என்று அவர் சொன்னார்.

இருப்பினும், இணையப்பதிவு  நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை இரவு 11.59 மணி வரை திறந்திருக்கும் என்று அவர் நேற்று மலாக்கா நகர உருமாற்றம் மையத்தில் (யு.டி.சி.) உள்ள பாடு முகப்பிடத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

முதியவர்கள் இணையம் வழி பதிவு செய்வதை விட முகப்பிடங்களில் பதிவு செய்வது மிகவும் வசதியானது என்று உஸிர் மேலும் கூறினார்.

நேற்றைய நிலவரப்படி  87 லட்சத்து 90 ஆயிரம்  மலேசியர்கள் பாடுவில் தங்கள் தரவுகளைப் பதிவு செய்துள்ளனர். மேலும் கடந்த  வாரம் முதல் அதிகரித்துள்ள பதிவுகளின் அடிப்படையில் எதிர்வரும் மார்ச் 3ஆம் தேதிக்குள் 50 சதவீதப் பதிவு  இலக்கை அடைய முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.


Pengarang :