NATIONAL

திவேட் துறையில் மலேசியா-சீனா கூடுதல் ஒத்துழைப்பு – துணைப் பிரதமர் தகவல்

கோலாலம்பூர், மார்ச் 29 – தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் (திவேட்)
துறைகளில் மலேசியாவும் சீனாவும் மேலும் ஒத்துழைப்பை
வலுப்படுத்தும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது
ஜாஹிட் ஹமிடி கூறினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அனைத்துலக அமைச்சர்
லியு ஜியான்சோவுடன் நேற்று நடத்திய சந்திப்பின் போது இவ்விவகாரம்
குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் துறைகளில் மலேசியாவிலுள்ள
மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்குக் கல்வி வாய்ப்புகளை
வழங்குவதற்கும், தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும் தொடர்
பயிற்சிகளை வழங்குவதற்கும் சீனா முன்வந்துள்ளதாக அவர் தனது
பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

மலேசியா-சீனா உறவின் 50ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வரும்
மே 31ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்வு குறித்தும் இந்த சந்திப்பில்
விவாதிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

அண்மைய சில மாதங்களாக நாட்டிற்கு வருகை தரும் பல சீன நாட்டுத்
தலைவர்களுடன் நான் சந்திப்பு நடத்தியுள்ளேன். மலேசியாவுக்கும்
சீனாவுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்பெறும் என அவர்கள்
அனைவரும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இரு நாட்டு மக்களும் மேலும் பயன் பெறுவதற்கு ஏதுவாக கட்சி மற்றும்
அரசாங்க நிலையில் மேலும் அதிக ஒத்துழைப்பு நிலவுவதற்கும்
அத்தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று அவர் கூறினார்.

இந்த சந்திப்பில் உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காடீர், தணை வெளியுறவு அமைச்சர் டத்தோ முகமது அலாமின் மற்றும் மஜ்லிஸ் அமானா ராயா (மாரா) தலைவர் டத்தோ டாக்டர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Pengarang :