ANTARABANGSA

தென்னாப்பிரிக்காவில் பஸ் விபத்து – 45 ஈஸ்டர் யாத்ரீகர்கள் பலி

மோகோபென், மார்ச் 29- தென்னாப்பிரிக்காவின் வட மாநிலமான
லிம்போபாவில் நேற்று பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 45 பேர்
உயிரிழந்ததோடு ஒருவர் காயங்களுக்குள்ளானதாக அந்நாட்டின்
போக்குவரத்து துறை கூறியது.

கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து பாலம் ஒன்றின் தடுப்புச் சுவரை
உடைத்துக் கொண்டு தரையில் விழுந்து தீப்பற்றியதாக போக்குவரத்து
துறை வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

அந்த பேருந்து ஈஸ்டர் யாத்ரீகர்களுடன் நிலம் சூழ்ந்த நாடான
போட்ஸ்வானாவிலிருந்து லிம்போபாவிலுள்ள மோரியா நகருக்குச் சென்று
கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்து தொடர்பில் போஸ்ட்வானா நாட்டிற்கு தனது ஆழ்ந்து
இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட தென்னாப்பிரிக்க அதிபர் சிரில்
ராமாபோஸா, அந்நாட்டிற்கு இயன்ற அனைத்து உதவிகளையும்
வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.

இந்த விபத்தில் ஒரு பயணியான 8 வயதுச் சிறுவனுக்கு அருகிலுள்ள
மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்று லிம்போபா
போக்குவரத்துத் துறை வெளியிட்ட மற்றொரு அறிக்கை கூறியது.

இந்த விபத்தில் பலரின் உடல்கள் தீயின் தாக்கம் காரணமாக அடையாளம்
தெரியாத அளவுக்கு உருக்குலைந்ததோடு மேலும் பலரின் உடல்கள்
இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளதாக மாநிலத் துறை தெரிவித்தது.


Pengarang :