ANTARABANGSA

காஸாவில் மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண்பதில் புதிய அரசு கவனம் செலுத்தும்

ரமல்லா, மார்ச் 29 – பாலஸ்தீன வரலாற்றில் 19வது பிரதமராக முகமது முஸ்தாபா தலைமையிலான  புதிய அரசாங்கத்தை  அமைப்பதற்கு அந்நாட்டு அதிபர் மாமுட் அப்பாஸ் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.

அரசாங்கத்தின் வேலை வாய்ப்புத் திட்டம் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் பட்டியலைப் பதவியேற்ற பிரதமர் முகமது முஸ்தாபா, அதிபர் மாமுட் அப்பாஸிடம் வழங்கியதாக  அதிகாரப்பூர்வ பாலஸ்தீன செய்தி நிறுவனமான வாஃபாவை மேற்கோள் காட்டி அனாடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

நாட்டின் 19 வது அரசாங்கம் மீதான நம்பிக்கையை அதிபர் புலப்படுத்தியுள்ளார் என்று  அச்செய்தி நிறுவனம் கூறியது.

முஸ்தாபா தலைமையிலான புதிய அரசாங்கத்தில்  23 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர் வெளியுறவு மந்திரி பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

புதிய அரசாங்கம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  அதிபர் அப்பாஸ் முன்னிலையில்  பதவி  உறுதிமொழி எடுக்கும் என்று வாஃபா தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கத்தின் பணி நிகழ்ச்சி நிரல் அதன் “பாலஸ்தீன தேசிய அமைப்புக்கான அரசியல் குறிப்பை” வலியுறுத்துகிறது என அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டது. இந்த திட்டத்தின் கீழ் காஸா தீபகற்பத்தில் மனிதாபிமான நோக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

கடந்தாண்டு அக்டோபர் 7 ம் தேதி நடத்தப்பட்ட  எல்லை தாண்டிய தாக்குதல்களின் விளைவாக  32,500 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு 74,900 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.


Pengarang :