NATIONAL

தொழிற்சாலை பஸ் மோதி மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

பாலிங், மார்ச் 29 – தொழிற்சாலை பஸ் மோதியதில் மோட்டார்
சைக்கிளோட்டி ஒருவர் மரணமடைந்தார். இச்சம்பவம் ஜாலான் மெர்பாவ்
பூலாஸ்- கோல கெட்டில் சாலையில் பெட்ரோல் நிலையம் ஒன்றின்
அருகே நேற்றிரவு 8.20 மணியளவில் நிகழ்ந்தது.

கனரக இயந்திர ஓட்டுநரான ஊய் சூ சிங் (வயது 43) வேலை முடிந்து
கோல பாக்கேங்கிலிருந்து கோல கெட்டிலில் உள்ள தனது வீடு நோக்கி
பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாகப் பாலிங்
மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சம்சடின் மாமாட்
கூறினார்.

சம்பவ இடத்தில், முன்னால் சென்று கொண்டிருந்த காரை முந்த முயன்ற
தொழிற்சாலை பேருந்து அவ்வாடவர் ஓட்டிச் சென்ற மோட்டார்
சைக்கிளை பின்புறம் மோதியதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த விபத்து நிகழ்ந்த போது அந்த மோட்டார் சைக்கிளோட்டி வலது புறம்
திரும்புவதற்காக சாலையின் வலது பக்கமாகச் சென்று
கொண்டிருந்ததாகக் கூறிய அவர், இவ்விபத்தில் தலையில் கடுமையான
காயங்களுக்குள்ளான அவர் சம்பவ இடத்திலியே உயிரிழந்தார் என்று
சொன்னார்.

இந்த விபத்தில் 38 வயதான பேருந்து ஓட்டுநர் காயமின்றி
உயிர்த்தப்பியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த விபத்து நிகழ்ந்த போது அந்த பேருந்து பினாங்கு மாநிலத்தின்
பாயான் லெப்பாசிலிருந்து ஏழு பயணிகளை ஏற்றி வந்தது. இவ்விபத்தில்
பயணிகளுக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என அவர் மேலும்
சொன்னார்.

விபத்தில் உயிரிழ்ந்த ஆடவரின் சடலம் சவப்பரிசோதனைக்காக கூலிம்
மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. பேருந்து ஓட்டுநர் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


Pengarang :