ECONOMYNATIONAL

பாடு’ தரவுத் தளத்தில் சுமார் 40 விழுக்காட்டு சிலாங்கூர் மக்கள் பதிவு

கோல லங்காட், மார்ச் 30-  ‘பாடு’ எனப்படும் முதன்மை தரவு தளத்தில் பதிவு செய்த   சிலாங்கூர் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை   40 விழுக்காட்டை எட்டியுள்ளதாக மலேசிய புள்ளி விபரத் துறை கூறியது.

மாநிலத்தில் உள்ள பல ‘பாடு’  பதிவு முகப்பிடங்களை முற்றுகையிடும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  மலேசிய  புள்ளிவிபரத் துறைத் தலைவர்  டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸிர் மஹிடின் கூறினார்.

சிலாங்கூரில் பதிவு  செய்தவர்கள் எண்ணிக்கை  14 லட்சத்து 50 ஆயிரம் பேரை   அல்லது 34.3 விழுக்காட்டை  எட்டியுள்ளது.  சதவீத அடிப்படையில் சிலாங்கூர் மிகக் குறைவானதாக இருந்தாலும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது எண்ணிக்கை அதிகமாக உள்ளது என அவர் சொன்னார்.

கடந்த வாரத்திலிருந்து நாங்கள் பல புதிய பதிவுகளைப் பெற்றுள்ளோம். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில்  பதிவு எண்ணிக்கை  அதிகரிப்பு 30 முதல் 40 சதவீதம் ஆகும் என்று அவர் கூறினார்.

நேற்று இங்குள்ள கம்போங் சுங்கை புவாயா சமூக மண்டபத்தில்  மாநில இயக்குநர் ஹர்தினி யாக்கோப்புடன்  இணைந்து ‘பாடு’ பதிவு நடவடிக்கையை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார் .

சிலாங்கூரில் இன்னும் குறைவாக இருக்கும் பாடு பதிவு சதவீதம் குறித்து கருத்துரைத்த  முகமட் உஸிர், இந்த மாநிலத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதோடு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது குடும்ப வருமானம் அதிகம் உள்ளவர்கள்  என்றும் விளக்கினார்.

அனைத்து அரசாங்க சேவைகள் மற்றும் சலுகைகள் இயல்பாக  கிடைக்கின்றன என்று நினைப்பதால் இந்தப் பதிவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் குடியிருப்பாளர்களும் உள்ளனர்.

அதிக வருமானம் உள்ளவர்களில் பெரும்பாலோர் ‘பாடு’ அமைப்பை உதவி தேவைப்படுபவர்களுக்கானது என்ற கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள். மேலும்  தாங்கள் சொந்த காலில் நிற்க முடியும் என்று  அவர்கள் நினைக்கிறார்கள்.

உண்மையில், இந்த அமைப்பு அரசாங்கத்திற்கு மக்கள் தரப்பினரை  அடையாளம் காண உதவுகிறது. இதன் மூலம்  வழங்கப்படும் சேவைகள் வீணாகாது. மேலும் அரசாங்கம் தேவையான திட்டங்களை  மேம்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.

கடந்த ஜனவரி 2 ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் தொடங்கப்பட்ட பாடு திட்டம்  தனிநபர் மற்றும் குடும்பத் தகவல்களுக்கான ஒரே தளமாக மாறியுள்ளது. இதன் மூலம் தகுதியான குடிமக்களுக்கு மானிய விநியோகம் மற்றும் உதவிக்கான செயல்திறனை  அதிகரிக்கிறது.

கடந்த ஜனவரி 2 முதல் மார்ச் 31 வரை www.padu.gov.my என்ற இணையதளம் மூலம் பாடு தரவு மையத்தில்  பதிவு செய்யலாம் .


Pengarang :