NATIONAL

மத்திய கிழக்கு நெருக்கடி-மலேசியர்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் முன்னுரிமை- பிரதமர்

கோலாலம்பூர், ஏப் 16- மத்திய கிழக்கு நெருக்கடியின் ஆக சமீபத்திய
நிலவரங்களை அரசாங்கம் அணுக்கமாக கவனித்து வரும்
அதேவேளையில் அங்குள்ள மலேசியர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும்
சுபிட்சத்தை உறுதி செய்வதற்கான ஆக்ககரமான நடவடிக்கைகளையும்
எடுத்து வருகிறது.

நாட்டின் பாதுகாப்பு எப்போதும் நமது முதன்மை இலக்காக இருந்து
வருகிறது. அதன் அடிப்படையில் மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்ற
நிலை குறித்து விவாதிப்பதற்கு நேற்று காலை நடைபெற்ற தேசிய
பாதுகாப்பு மன்றக் கூட்டத்திற்கு நானே தலைமை தாங்கினேன் என்று
அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறினார்.

இந்த கூட்டத்தில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜைட்
ஹமிடி, தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின்,
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில்,
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான், அரசாங்கத்
தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஜுக்கி அலி மற்றும் உயர்
அதிகாரிகள் பங்கு கொண்டனர்.

தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டம் இரண்டு தினங்கள் தொடர்ச்சியாக
நடைபெற்று வருவது மத்திய கிழக்கு விவகாரம் மீது மடாணி அரசாங்கம்
தீவிர கவனம் செலுத்தி வருவதை பிரதிபலிக்கும் வகையில் உள்ளதோடு
அங்குள்ள மலேசியர்களுக்குப் பாதிப்பு ஏற்படாமலிருப்பதை உறுதி
செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கில் நிலைமை மோசமடையக் கூடாது என்பதில்
அனைத்துலக சமூகம் அக்கறையுடன் உள்ளதை தெளிவாகக் காண
முடிகிறது. டாம்ஷிக்கில் உள்ள ஈரானிய அரச தந்திர அலுவலகம் மீது
இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான்
நடத்திய ட்ரோன் தாக்குதல் சட்டப்பூர்வமான ஒன்றாகும்.

இஸ்ரேலிய இராணுவம் எதிர்த்தாக்குதல் நடத்தாத வரையில் தாங்கள்
பதிலடிக் கொடுக்கப்போவதில்லை என்று ஈரான் அளித்துள்ள வாக்குறுதி
எங்களுக்கு மனநிறைவை அளிக்கிறது என்று அன்வார் சொன்னார்.

இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான ஒரே வழி காஸாவில்
நடத்தப்படும் மனிதாபிமானமற்றத் தாக்குதல்களுக்கு முற்றுப் புள்ளி
வைப்பதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :