SELANGOR

மூன்று மாநிலங்களில் 748 பேர் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம்

கோலாலம்பூர், ஏப் 18- நேற்றிரவு 10.00 மணி நிலவரப்படி சிலாங்கூர்,
நெகிரி செம்பிலான் மலாக்கா ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 748 பேராக உயர்ந்துள்ளது. நேற்று
மாலை இந்த எண்ணிக்கை 534 பேராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் மாநிலத்தில் மூன்று துயர் துடைப்பு மையங்கள்
திறக்கப்பட்டுள்ளதாகத் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் பேரிடர்
கட்டுப்பாட்டு மையத்தின் சமீபத்திய அறிக்கை கூறியது.

பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள ஒரு நிவாரண மையத்தில் 356 பேரும்
கிள்ளானில் 204 பேரும் கோல சிலாங்கூரில் 54 பேரும் தங்க
வைக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் போர்ட்டிக்சனில் ஒரு துயர் துடைப்பு
மையம் திறக்கப்பட்டுள்ள வேளையில் அதில் 79 பேர் அடைக்கலம்
நாடியுள்ளனர். மலாக்காவிலுள்ள ஒரு மையத்தில் நேற்றிரவு 8.00 மணி
நிரவரப்படி 55 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே சிலாங்கூர் மாநிலத்தின் கிள்ளான் ஆறு மற்றும் திரங்கானு
மாநிலத்தின் பெசுட் ஆறு ஆகியவற்றில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தில்
உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :