NATIONAL

சிமெண்ட் கலவையில் சிக்கி ஆடவர் மரணம் – வலது கை, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் மீட்பு

ஷா ஆலம், ஏப் 18- சிமெண்ட் கலவை இயந்திரத்தில் சிக்கி ஆடவர்
ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் ஷா ஆலம் செக்சன் 35இல் உள்ள
புளோக் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று நிகழ்ந்தது.

சிமெண்ட் கலவை டாங்கியினுள் ஆடவர் ஒருவரின் சடலம்
காணப்பட்டது தொடர்பில் பொது மக்களிடமிருந்து நேற்று காலை 11.44
மணியளவில் தாங்கள் புகாரைப் பெற்றதாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ்
தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.

அந்த டாங்கியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வலது கையின்
முழங்கைக்கு கீழுள்ள பகுதியும் தலையும் துண்டிக்கப்பட்ட நிலையில்
ஆடவரின் உடல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

அந்த ஆடவருக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடிய இதரக் காயங்கள் உடலில்
காணப்படவில்லை என்பதோடு அவர் பலவந்தமாக அந்த சிமெண்ட்
கலவையில் தள்ளப்பட்டதற்கான சான்றுகளும் கண்டறியப்படவில்லை
என்பது தடவியல் துறையின் சோதனையில் கண்டறியப்பட்டது என்றார்
அவர்.

அந்த ஆடவர் தாமாகவே அந்த டாங்கியில் குதித்திருக்கக் கூடும் என
சந்தேகிக்கப்படும் வேளையில் அந்த கலவை இயந்திரத்தில் உள்ள
கத்திகளால் அவரின் உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என அவர்
சொன்னார்.

அந்த ஆடவரின் இடது கையில் காணப்பட்ட பச்சை குத்தியதற்கான
அடையாளத்தைக் கொண்டு அவரின் குடும்பத்தினர் அடையாளம்
கண்டனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :