NATIONAL

ஐடில்பித்ரி மடாணி 2024 கொண்டாட்டம் ஏழு மாநிலங்களில் இன்று முதல் நடைபெறும்

புத்ராஜெயா, ஏப் 17 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனான ஐடில்பித்ரி மடாணி 2024 கொண்டாட்டம் இன்று ஜோகூரில் தொடங்கி ஏழு மாநிலங்களில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு ஏப்ரல் 20 ஆம் தேதி சபாவிலும், அதைத் தொடர்ந்து மலாக்கா (ஏப்ரல் 22), கிளந்தான் (மே 2), கெடா (மே 4), பினாங்கு (மே 5) மற்றும் திரங்கானு (மே 9) ஆகிய இடங்களில் கொண்டாடப்படும் என நிகழ்வு செயலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

சபாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாநில அரசு தொகுப்பாளராகவும், தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகத்தால் நடத்தப்படும் என்றும் அது கூறியது.

இது கோத்தா கினாபாலுவில் உள்ள சபா சர்வதேச மாநாட்டு மையத்தில் (SICC) காலை 10.30 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

மேலும், இந்த நிகழ்ச்சி ஜொகூரில், பாடாங் பெகோனியா, ஆங்சானா ஜோகூர் பாரு மாலில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும்.

இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம் சமூகத்தினரிடையே நல்லெண்ணத்தையும் ஒற்றுமையையும் வளர்ப்பதும் தலைவர்கள் மக்களைச் சந்திக்க வைப்பதும் ஆகும்.

மந்திரி புசார் அல்லது மாநில முதல்வர்களும் கலந்து கொள்ளும் கொண்டாட்டத்தில் பிரதமர் முக்கிய விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார்.

கூட்டாட்சி மற்றும் மாநில அளவிலான தலைவர்களுடன் ஐடில்பித்ரியை கொண்டாட அதிகமானவர்களுக்கு இது வாய்ப்பளிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

– பெர்னாமா


Pengarang :